
பிஜிடி தொடரின் மீதமுள்ள இரு டெஸ்டுகளுக்கு தனுஷ் கோட்டியான் தேர்வு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார்.
ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான பார்டர் - காவஸ்கர் தொடரின் முதல் மூன்று டெஸ்டுகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் உள்ளன. பிரிஸ்பேன் டெஸ்ட் முடிவடைந்தவுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். குறிப்பாக மெல்போர்ன் மற்றும் சிட்னியில் சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஸ்வினின் ஓய்வு அறிவிப்பு வெளியானது.
இதனால், அஸ்வினுக்கு மாற்று வீரரைத் தேர்வு செய்ய வேண்டிய தேவை இருந்தது. மும்பையைச் சேர்ந்த ஆல்-ரௌண்டர் தனுஷ் கோட்டியான் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இவர் பிஜிடி தொடருக்கு முன்பு நடைபெற்ற ஆஸ்திரேலியா ஏ தொடரில் விளையாடியிருந்தார்.
ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் மெல்போர்னில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதற்கு முன்பு இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ், அக்ஷர் படேல் இருக்க, தனுஷ் கோட்டியான் தேர்வு செய்யப்பட்டது ஏன் ரோஹித் சர்மா விளக்கமளித்தார்.
"தனுஷ் கோட்டியான் ஒரு மாதத்துக்கு முன்பு இங்கு வந்திருந்தார். குல்தீப் யாதவிடம் விசா இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு யாரால் விரைவாக வர முடியுமோ அவர்கள் தான் தேவைப்பட்டார்கள். தனுஷ் ஏற்கெனவே இங்கு வந்து விளையாடியிருக்கிறார் (சிரித்தபடி கூறினார்).
நகைச்சுவை ஒரு புறம் இருக்கட்டும். கடந்த இரு ஆண்டுகளாக தனுஷ் கோட்டியான் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். சிட்னி அல்லது மெல்போர்னில் ஒருவேளை இரு சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் பட்சத்தில், மாற்று வீரர் ஒருவர் தேவை.
ஹெர்னியா அறுவைச் சிகிச்சை செய்துள்ளதால், குல்தீப் யாதவ் முழு உடற்தகுதியுடன் இல்லை. அக்ஷர் படேலுக்குக் குழந்தை பிறந்துள்ளது. எனவே, அவர் பயணிக்கப்போவதில்லை.
இதன் காரணமாகவே, தனுஷ் எங்களுக்கு சிறந்த தேர்வாக இருந்தார். கடந்த ரஞ்சி கோப்பைப் பருவத்தில் மும்பை வென்றதற்கு இவர் ஒரு முக்கியக் காரணம்" என்றார் ரோஹித் சர்மா.