
பிஜிடி தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 3 அன்று தொடங்குகிறது. முதல் நான்கு டெஸ்டுகள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைக்கவும் பிஜிடி தொடரை இழக்காமல் தக்கவைக்கவும் சிட்னி டெஸ்டில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளது.
சிட்னியில் நடைபெறும் டெஸ்ட் பிங்க் டெஸ்டாக நடைபெறவுள்ளது.
பிங்க் டெஸ்ட் என்றால் என்ன?
ஆண்டுதோறும் சிட்னியில் நடைபெறும் முதல் டெஸ்ட் பிங்க் டெஸ்டாக குறிக்கப்படும். டெஸ்ட் நடைபெறும்போது மைதானம், டெஸ்டுக்கு பயன்படுத்தப்படும் ஸ்டம்புகள் என அனைத்தும் பிங்க் நிறத்தில் இருக்கும்.
காரணம் என்ன?
மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிங்க் டெஸ்ட் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிளென் மெக்ராத் மனைவி ஜேன் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமானார்.
2005-ல் ஜேனுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டவுடன், மெக்ராத் அறக்கட்டளையை கிளென் மெக்ராத் தொடங்கினார். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் அறக்கட்டளையைக் கைக்கோர்க்கச் செய்தார் மெக்ராத். இதன்மூலம் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ நிதி திரட்டப்படுகிறது.
ஜேன் மறைந்த ஓராண்டுக்குப் பிறகு 2009 முதல் பிங்க் டெஸ்ட் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியா, இந்தியா மோதும் சிட்னி டெஸ்ட் 17-வது பிங்க் டெஸ்ட்.