

தென்னாப்பிரிக்க ஏ தொடருக்கு எதிரான இந்திய ஏ அணியில் சர்ஃபராஸ் கான் இடம்பெறாதது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
சர்ஃபராஸ் கான் முதல் தர கிரிக்கெட்டில் 56 ஆட்டங்களில் 4,759 ரன்கள் குவித்துள்ளார். இவருடைய சராசரி 65.19. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் இவருடைய சராசரி 117.47 ஆக உள்ளது. இதில் 10 சதங்கள், 5 அரை சதங்கள் அடங்கும்.
கடந்தாண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார். 6 டெஸ்டுகளில் விளையாடியுள்ள அவர் 37.10 சராசரியில் 371 ரன்கள் எடுத்துள்ளார்.
நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் சதமடித்தாலும், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் சேர்க்கப்படவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு அங்கு நடைபெற்ற பயிற்சி ஆட்டங்களில் சர்ஃபராஸ் கான் சிறப்பாகவே பேட்டிங் செய்தார்.
சுழற்பந்துவீச்சைத் திறம்பட எதிர்கொள்வதில் புகழ்பெற்றவர் என்பதால், உள்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் சர்ஃபராஸ் கான் முக்கியமானவராகக் கருதப்படலாம் எனப் புரிந்துகொள்ளப்பட்டது. பிறகு, இவருடைய உடல் எடை மிகவும் பேசுபொருளானது. இதைக் கவனத்தில் கொண்டு சுமார் 17 கிலோ அளவுக்கு உடல் எடையைக் குறைத்தார் சர்ஃபராஸ் கான்.
இந்நிலையில் தான் தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான இரு நான்கு நாள் ஆட்டங்களுக்கு இந்திய ஏ அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் சர்ஃபராஸ் கானின் பெயர் இடம்பெறவில்லை. இதுவே சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் ஷாமா முஹமது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிடுகையில், "தனது பெயர் காரணமாக சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாமல் உள்ளாரா! இந்த விவகாரத்தில் கம்பீர் என்ன நிலைப்பாட்டில் இருப்பார் என்பது தெரியும்" என்று ஷாமா முஹமது குறிப்பிட்டுள்ளார். இதுவே சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இவற்றுக்கு மத்தியில் சர்ஃபராஸ் கானுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. இந்தக் காயம் காரணமாக அவர் துலீப் கோப்பை மற்றும் இரானி கோப்பைப் போட்டிகளில் விளையாடவில்லை. ரஞ்சி கோப்பைப் போட்டியில் மும்பைக்காக விளையாடி வருகிறார்.
சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாதது குறித்து பிசிசிஐ-க்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
"இந்திய டெஸ்ட் அணியின் திட்டங்களில் சர்ஃபராஸ் கான் இல்லை என்று சொல்வது அல்லது அவருக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டதாகச் சொல்வது சரியல்ல. அவர் திறமையான வீரர். காயத்திலிருந்து குணமடைந்து திரும்பியுள்ள சர்ஃபராஸ் கான் ரஞ்சி கோப்பையில் முடிந்தளவுக்கு நிறைய ஆட்டங்களில் விளையாட வேண்டும் என்பதை உறுதி செய்ய தேர்வுக் குழுவினர் விரும்புகிறார்கள் என்பது தான் நிதர்சனம். இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டிருந்தால், ரஞ்சி கோப்பபைப் போட்டியில் அடுத்த சில சுற்று ஆட்டங்களை அவர் தவறவிட நேரிட்டிருக்கும். இரண்டாவது ஆட்டத்தில் சர்ஃபராஸ் கானைச் சேர்க்க யோசனை இருந்தது. ஆனால், தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான பயிற்சி ஆட்டமாக இருக்கும் எனக் கருதி கேஎல் ராகுல் உள்ளிட்டோர் தென்னாப்பிரிக்க ஏ தொடரில் விளையாட ஆர்வம் காட்டினார்கள்" என்று பிசிசிஐ-க்கு நெருங்கிய வட்டாரம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க ஏ தொடருக்கான இந்திய ஏ அணி
முதல் நான்கு நாள் ஆட்டம்
ரிஷப் பந்த் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆயுஷ் மாத்ரே, என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், ஹர்ஷ் துபே, தனுஷ் கோடியான், மானவ் சுதார், அன்ஷுல் கம்போஜ், யஷ் தாக்குர், ஆயுஷ் பதோனி, சரன்ஷ் ஜெயின், குர்னூர் பிரார், கலீல் அஹமது.
இரண்டாவது நான்கு நாள் ஆட்டம்
ரிஷப் பந்த் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல், துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெயிக்வாட், ஹர்ஷ் துபே, தனுஷ் கோடியான், மானவ் சுதார், கலீல் அஹமது, குர்னூர் பிரார், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, முஹமது சிராஜ், ஆகாஷ் தீப்.
India A | Sarfaraz Khan | Shama Mohamed | South Africa A |