
சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் சஞ்சு சாம்சனுக்கு அதில் இடமளிக்கப்படாதது ரசிகர்களிடையே மிகப் பெரிய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் முடிந்த விஜய் ஹசாரே போட்டியில் கேரள அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படவில்லை. பயிற்சி முகாமில் அவர் இணையாததால் கோபம் கொண்ட கேரள கிரிக்கெட் சங்கம் அவரை அணியிலிருந்து வெளியேற்றியது. இதுவே இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காததற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
கடைசியாக விளையாடிய 5 சர்வதேச டி20 ஆட்டங்களில் 3 சதங்களை அடித்துள்ளார் சஞ்சு சாம்சன். மேலும் கடைசியாக விளையாடிய ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதமடித்திருந்தார். இதனால் சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சுலபமாக இடம்பிடிப்பார் எனக் கருதபட்ட நிலையில், ரிஷப் பந்துக்கு வாய்ப்பளித்துள்ளது தேர்வுக்குழு.
கேரள கிரிக்கெட் சங்கத்தால் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஒரு திறமையான வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை, கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் ஈகோவால் சீரழிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வேதனை தெரிவித்துள்ளார்.