
ஐபிஎல் இறுதிச் சுற்று மழை எச்சரிக்கை காரணமாக அஹமதாபாதில் நடத்தப்பட்டதாக பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.
ஐபிஎல் 2024 இறுதிச் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய அணிகளின் மைதானங்களிலேயே அடுத்தாண்டின் பிளே ஆஃப் சுற்று நடைபெறுவது வழக்கம். கோப்பையை வெல்லும் அணியின் சொந்த மைதானத்தில் இறுதிச் சுற்று நடைபெறும். இதன் அடிப்படையில், ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று மற்றும் இறுதிச் சுற்று ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டி இடையில் ஒரு வார காலம் தடைப்பட்டது. இதன்பிறகு, ஐபிஎல் போட்டியின் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டது. குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்கள் முல்லாபூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிச் சுற்று அஹமதாபாதில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஐபிஎல் இறுதிச் சுற்று அஹமதாபாதுக்கு மாற்றப்பட்டது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. பெரும்பாலான ஆட்டங்களில் குஜராத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்துக்கு ஒதுக்கப்படுவதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் சொல்லப்பட்டன. ஐபிஎல் 2022-க்கு பிறகு நரேந்திர மோடி மைதானத்துக்கு ஒதுக்கப்பட்ட 3-வது இறுதிச் சுற்று இது.
இந்நிலையில், ஐபிஎல் இறுதிச் சுற்றை அஹமதாபாதில் நடத்துவதற்கான காரணத்தை பிசிசிஐ வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது. ஒரு வார தடைக்காலத்துக்குப் பிறகு ஐபிஎல் ஆட்சி நிர்வாகக் குழு கூடியபோது, எந்தெந்த நகரங்களில் மழை எவ்வளவு மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு வானிலை ஆய்வாளர்களின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் பார்க்கும்போது கொல்கத்தாவில் இறுதிச் சுற்று நடைபெறும் நாளன்று மழை பெய்வதற்கான வாய்ப்பு 65 சதவீதம். இதுவே அஹமதாபாதில் 3 சதவீதம் என்று சொல்லப்பட்டதால், இறுதிச் சுற்று அஹமதாபாத் மைதானத்துக்கு மாற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா கிரிக்பஸ்ஸிடம் இதுபற்றி கூறுகையில், "இறுதிச் சுற்று அஹமதாபாதுக்கு மாற்றப்பட்டது ஒருபோதும் அரசியல் சார்ந்த முடிவு கிடையாது. அறிவியல் சார்ந்த கருத்துகளைச் சார்ந்திருந்தோம். ஆட்சி நிர்வாகக் குழு கூடியபோது, அஹமதாபாதில் மழை இருக்காது என வானிலை தகவல்கள் கூறின" என்றார் பிசிசிஐ செயலர்.
குவாலிஃபையர் 2-ல் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மோதியபோது, மழை குறுக்கிட்டு ஆட்டத்தைத் தாமதப்படுத்தியது. இருந்தாலும், ஒரு ஓவர் கூட குறைக்கப்படாமல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இறுதிச் சுற்றில் மழை இல்லை. ஆனால், இறுதிச் சுற்று நடைபெற்றபோது, கொல்கத்தாவில் மழை கொட்டித் தீர்த்துள்ளது.