

ஆஷஸ் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க பேட்டர் உஸ்மான் கவாஜாவால் தொடக்க பேட்டராக களமிறங்க முடியாமல் போனது, அந்த அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் முதல் டெஸ்ட் பெர்த்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க் கடைசி பந்தில் ஸாக் கிராலே விக்கெட்டை வீழ்த்தி அட்டகாசமான தொடக்கத்தைத் தந்தார்.
ஸ்டார்க் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இங்கிலாந்து பேட்டர்கள் திக்குமுக்காடி போனார்கள். துணை கேப்டன் ஹாரி புரூக் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிட்செல் ஸ்டார்க் 58 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அறிமுக வீரர் பிரெண்டன் டக்கெட் 2 விக்கெட்டுகளையும் கேம்ரூன் கிரீன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்காட் போலண்ட் 10 ஓவர்கள் வீசி விக்கெட் எடுக்காமல் 62 ரன்கள் கொடுத்தார்.
இங்கிலாந்து அணி கடைசி 5 விக்கெட்டுகளை 23 பந்துகளில் இழந்தது. ஆஸ்திரேலிய தொடக்க பேட்டர் உஸ்மான் கவாஜா தொடக்கம் முதலே அவ்வப்போது களத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார். இதேபோல இங்கிலாந்து அணி 29 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்திருந்தபோது கவாஜா களத்திலிருந்து வெளியேறினார்.
இதன்பிறகு தான் இங்கிலாந்து அணி மிக வேகமாக கடைசி 5 விக்கெட்டுகளை இழந்தது. சூழலை உணர்ந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜாவை களத்துக்குள் அழைத்தார். அவரும் களத்தில் இருந்தார்.
எனினும், போதிய நேரம் அவர் களத்தில் இல்லாததால், தொடக்க பேட்டராக களமிறங்க கவாஜா அனுமதிக்கப்படவில்லை. ஐசிசி விதிப்படி, களத்துக்கு வெளியே இருந்த நேரத்தின் அளவுக்கு நிகராக களத்துக்குள் அவர் நேரத்தைச் செலவிடவில்லை. இதன் காரணமாகவே தொடக்க பேட்டராக கவாஜாவால் களமிறங்க முடியவில்லை.
டேவிட் வார்னர் ஓய்வுக்குப் பிறகு கவாஜாவுடன் களமிறங்கப்போகும் 6-வது தொடக்க பேட்டர் யார் என்ற கேள்வி தான் ஆஷஸுக்கு முன்பு இருந்தது. ஜேக் வெதரால்ட் தொடக்க பேட்டராக களமிறங்குவார் என்பது உறுதியானது. ஆனால், ஆட்டத்தின் விதி செய்த வினையால், கவாஜாவால் தொடக்க பேட்டராக களமிறங்க முடியாமல் போனது.
மார்னஸ் லபுனேஷ் தொடக்க பேட்டராக விளையாடினார். 4-வது பேட்டராக களமிறங்க வேண்டிய ஸ்டீவ் ஸ்மித் 3-வது வரிசையில் களமிறங்கினார். இந்த மாற்றம் காரணமாக வெதரால்ட் தான் முதல் பந்தை எதிர்கொள்ள நேரிட்டது. ஆர்ச்சர் வீசிய முதல் பந்தைத் தாக்குப்பிடித்தாலும், இரண்டாவது பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியாவுக்கு இது மிக மோசமான தொடக்கமாக மாறியது. கவாஜாவுக்கும் இது சரியாக அமையவில்லை. 4-வது வரிசையில் களமிறங்கிய அவர் வெறும் 6 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்து இன்னும் 49 ரன்கள் பின்தங்கியுள்ளது. இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Australian Opener Usman Khawaja was not allowed to open against England in Ashes 1st Test because of ICC Rule.
Ashes | AUS v ENG | Steve Smith | Usman Khawaja | Ben Stokes | Mitchell Starc |