
ஐபிஎல் 2025-ல் லீக் சுற்றில் 7 ஆட்டங்கள் மீதமிருந்த நிலையிலேயே குஜராத் டைடன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. பிளே ஆஃப் சுற்றுக்கு அணிகள் தகுதி பெற்றாலும் முதலிரு இடங்களைப் பிடித்து குவாலிஃபையர் 1-ல் விளையாடப்போகும் அணிகள் எவை என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.
குஜராத் டைடன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சமீபத்திய ஆட்டங்களில் தோல்வியடைந்ததால், இந்தக் கேள்விக்கானப் பதில் மேலும் சுவாரசியமாகியுள்ளது.
குவாலிஃபையர் 1-ல் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும். இதில் தோல்வியடையும் அணிக்கு குவாலிஃபையர் 2-ல் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.
புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்தால், எலிமினேட்டரில் விளையாட நேரிடும். இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் 2-ல் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
குஜராத் டைடன்ஸ் - 18 புள்ளிகள்
மீதமுள்ள ஆட்டங்கள் - 1
சிஎஸ்கேவுக்கு எதிராக வெற்றி பெற்றால், 20 புள்ளிகளை அடைந்து முதலிரு இடங்களை உறுதி செய்யும். ஆர்சிபி மற்றும் மும்பையால் மீதமுள்ள ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் 20 புள்ளிகளைப் பெற முடியாது. பஞ்சாப் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் 21 புள்ளிகளை அடைந்து முதலிடத்துக்கு முன்னேறும்.
சிஎஸ்கேவுக்கு எதிராக குஜராத் தோல்வியடைந்தால், முதலிரு இடங்களைப் பிடிக்க மற்ற அணிகளின் முடிவைச் சார்ந்திருக்க வேண்டும்.
சிஎஸ்கேவுக்கு எதிராக குஜராத் தோல்வியடைந்தால் 18 புள்ளிகளில் இருக்கும். அப்போது ஆர்சிபி மற்றும் மும்பை மீதமுள்ள ஆட்டத்தில் தோல்வியடைய வேண்டும். அல்லது ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் மீதமுள்ள ஆட்டங்களில் தோல்வியடைய வேண்டும். பஞ்சாப் தில்லியை வீழ்த்தி மும்பையிடம் தோற்றாலும் முதலிரு இடங்களை குஜராத் அணியால் பெற முடியாது.
பஞ்சாப் கிங்ஸ் - 17 புள்ளிகள்
மீதமுள்ள ஆட்டங்கள் - 2
பஞ்சாப் அணி மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் 21 புள்ளிகளுடன் முதலிடத்தில் நிறைவு செய்யும்.
ஓர் ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்றால், 19 புள்ளிகளுடன் முதலிரு இடங்களை உறுதி செய்யலாம். ஆனால், குஜராத் அல்லது ஆர்சிபி தனது கடைசி ஆட்டத்தில் தோல்வியடைய வேண்டும்.
பஞ்சாப் மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்தால், முதலிரு இடங்களை உறுதி செய்ய முடியாது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 17 புள்ளிகள்
மீதமுள்ள ஆட்டங்கள் - 2
ஆர்சிபி கடைசி ஆட்டத்தில் லக்னௌவுக்கு எதிராக வெற்றி பெற்றால் மட்டுமே முதிலிரு இடங்களை உறுதி செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கு சிஎஸ்கேவுக்கு எதிராக குஜராத் தோற்க வேண்டும். குஜராத் தோல்வியடைந்தால், லக்னௌவுக்கு எதிராக வெற்றி பெற்றால் மட்டுமே போதும்.
குஜராத் வெற்றி பெற்றால் பஞ்சாப் அணி மீதமுள்ள இரு ஆட்டங்களில் குறைந்தபட்சம் ஒன்றிலாவது தோற்க வேண்டும். அப்போது முதலிரு இடங்களைப் பிடிக்கத் தேவையான நெட் ரன்ரேட் என்ன என்பது லக்னௌ ஆட்டத்துக்கு முன்பு ஆர்சிபிக்கு தெரியவரும்.
குஜராத் மற்றும் பஞ்சாப் மீதமுள்ள ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால், லக்னௌவுக்கு எதிராக ஆர்சிபி வெற்றி பெற்றாலும் முதலிரு இடங்களை உறுதி செய்ய முடியாது.
மும்பை இந்தியன்ஸ் - 16 புள்ளிகள்
மீதமுள்ள ஆட்டங்கள் - 2
மும்பை தனது கடைசி ஆட்டத்தில் பஞ்சாபை கட்டாயம் வீழ்த்த வேண்டும். இருந்தாலும், மற்ற அணிகளின் முடிவையே மும்பை சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.
குஜராத் தனது கடைசி ஆட்டத்தில் தோல்வியடைய வேண்டும். ஆர்சிபி தனது கடைசி ஆட்டத்தில் தோல்வியடைய வேண்டும். தில்லிக்கு எதிராக பஞ்சாப் வெற்றி பெற்றாலும், முதலிரு இடங்களை மும்பையில் உறுதி செய்ய முடியும். அதாவது, எந்த அணியும் 18 புள்ளிகளைக் கடக்கக் கூடாது.