யார் இந்த திலக் வர்மா?

டி20யில் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் அடித்த முதல் வீரர் என்கிற உலக சாதனையைப் படைத்தார்.
யார் இந்த திலக் வர்மா?
2 min read

இந்திய டி20 அணிக்குள் திலக் வர்மா நிரந்தர இடத்தை எப்படிப் பிடித்தார் என்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

ஹைதராபாதைச் சேர்ந்த திலக் வர்மா எலெக்ட்ரிசியனின் மகன். 2020-ல் கரோனா காலத்தில், தன் மகனின் கிரிக்கெட் பயிற்சிக்குப் பணம் கட்ட முடியாத சமயத்தில் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று திலக் வர்மாவைக் கவனித்துக் கொண்டார் பயிற்சியாளர் சலாம். 9 வயதில் அவர்தான் திலக் வர்மாவின் திறமைகளைக் கண்டறிந்து லேகலா கிரிக்கெட் அகாடமியில் திலக் வர்மாவைச் சேர்த்தார். என் பயிற்சியாளர் தான் கிரிக்கெட் உபகரணங்களை வாங்கிக் கொடுத்து உரிய கிரிக்கெட் தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொடுத்தார் என்கிறார் திலக் வர்மா.

16 வயதில் ஹைதராபாத் அணிக்காக ரஞ்சி கோப்பையில் அறிமுகமானார். 2020 யு-19 உலகக் கோப்பையில் இரு ஆட்டங்களில் விளையாடினார் திலக் வர்மா.

2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ. 1.7 கோடிக்கு 19 வயது திலக் வர்மாவைத் தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அந்த வருடம் 14 ஐபிஎல் ஆட்டங்களில் 2 அரை சதங்களுடன் 397 ரன்கள் குவித்தார். அவரிடமுள்ள பக்குவமான ஆட்டத்தினால் விரைவில் இந்தியாவுக்கு விளையாடுவார் என்றார் ரோஹித் சர்மா. அடுத்த ஐபிஎல்-லில் 343 ரன்கள் எடுத்தார். உடனே, ஆகஸ்ட் 2023-ல் மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடும் டி20 தொடருக்குத் தேர்வானார். முதல் டி20யில் எதிர்கொண்ட 2-வது மற்றும் 3-வது பந்துகளில் தொடர்ச்சியாக சிக்ஸர்கள் அடித்தார்.

2024-ல் காயம் காரணமாக சில தொடர்களில் விளையாடாத திலக் வர்மா, தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றார். நான் மூன்றாவது பேட்டராக களமிறங்க வாய்ப்பு கொடுங்கள் என்று சூர்யகுமாரிடம் வேண்டுகோள் விடுக்க அவரும் ஏற்றுக்கொண்டார்.

ANI

3-வது டி20யில் மூன்றாவதாகக் களமிறங்கிய திலக் வர்மா, 56 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார்.

அடுத்த டி20யிலும் பேட்டைச் சுழற்ற ஆரம்பித்தார் திலக் வர்மா. 47 பந்துகளில் 10 சிக்ஸர்களுடன் 120 ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்த டி20 ஆட்டங்களில் சதங்கள் அடித்த 2-வது இந்தியர் என்கிற பெருமையை அடைந்தார். டி20 தொடரை இந்தியா வென்றது. தொடர் நாயகன் விருதைப் பெற்றார் திலக் வர்மா. பிறகு அடுத்து விளையாடிய சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் சதமடித்து டி20யில் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் அடித்த முதல் வீரர் என்கிற உலக சாதனையைப் படைத்தார்.

ஐபிஎல் 2025-க்கு மும்பை அணி திலக் வர்மாவை ரூ. 8 கோடிக்குத் தக்கவைத்தது.

தற்போது, சென்னையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20யில் இலக்கை விரட்டியபோது கடைசிவரை பக்குவமாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார் திலக் வர்மா. இதனால் தோனியைப் போல விளையாடுகிறார் என்கிற பாராட்டும் ரசிகர்களிடமிருந்து கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in