
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20யில் 37 பந்துகளில் சதமடித்து 135 ரன்கள் குவித்து பல சாதனைகளை நிகழ்த்தினார் 24 வயது அபிஷேக் சர்மா. நான் பார்த்ததிலேயே பந்தை இந்தளவுக்குத் தெளிவாக அடிக்கும் வீரர் இவர் தான் என்று பாராட்டினார் இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர்.
அபிஷேக் சர்மாவின் தந்தை ராஜ்குமார் சர்மா, முன்னாள் கிரிக்கெட் வீரர். அவர் ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்பதால் அபிஷேக் சர்மாவும் சுழற்பந்து வீச்சாளராகவே தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். 9 வயதில் தனது மகனின் பேட்டிங் திறமையை கவனித்த ராஜ்குமார், அதில் சிறப்புக் கவனம் அளித்தார்.
இந்தியாவின் 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியான விஜய் மெர்சண்ட் கோப்பையில் 2015-16 பருவத்தில் பஞ்சாப் அணிக்காக நம்பமுடியாத அளவுக்கு 7 ஆட்டங்களில் 1,200 ரன்கள் அடித்தார் அபிஷேக் சர்மா. அடுத்தக் கட்டமாக 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டனாக இருந்து ஆசியக் கோப்பையை வென்றார்.
2017 ரஞ்சி கோப்பையில் யுவ்ராஜ் சிங்கின் நட்பு கிடைத்தது. அன்று ஆரம்பித்தது குரு - சிஷ்யன் உறவு. அணு அணுவாக கிரிக்கெட் தொழில்நுட்பங்கள் முதல் மனநிலையைச் சீராக வைத்துக்கொள்வது வரை அபிஷேக் சர்மாவை ஒவ்வொரு தருணத்திலும் சரியான பாதையில் வழிநடத்துவது யுவ்ராஜ் சிங் தான். தினமும் காலையில் 4 மணிக்கு எழுந்துகொள்ளும் அபிஷேக் சர்மா, யுவி என்னென்ன பயிற்சிகளை மேற்கொள்ளச் சொன்னாரோ அதை அப்படியே செய்து வருகிறார் என்கிறார் தந்தை ராஜ்குமார்.
2018-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணியில் விளையாடினார். அந்த அணியில் ஷுப்மன் கில், அர்ஷ்தீப் சிங் எல்லாம் விளையாடினார்கள். உலகக் கோப்பையில் ரன்கள் அதிகமாகக் கொடுக்காமல் நன்றாகப் பந்துவீசினார். காலிறுதியில் பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி அரை சதமெடுத்தார். அந்த உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதால் 2018 ஐபிஎல் ஏலத்தில் 17 வயதில் 55 லட்சத்துக்கு தில்லி அணிக்குத் தேர்வானார் அபிஷேக் சர்மா. பஞ்சாப் அணியில் மட்டுமல்லாமல் ஐபிஎல்-லிலும் ஆரம்பத்தில் நடுவரிசை, கீழ் நடுவரிசை பேட்டராகவே அவர் விளையாடினார்.
2018 ஐபிஎல்-லில் தனது முதல் ஆட்டத்தில் ஆர்சிபிக்கு எதிராக 19 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து தன் வருகையை உலகுக்கு வெளிப்படுத்தினார். 2019-ல் தில்லி அணியிலிருந்த அபிஷேக் சர்மாவைப் புத்திசாலித்தனமாக டிரேட் செய்துகொண்டது சன்ரைசர்ஸ் அணி. 2021 ஐபிஎல் இறுதியில் அவருடைய பேட்டிங் திறமையை மேலும் அறிந்துகொண்டு, 2022 ஏலத்தில் அபிஷேக் சர்மாவை ரூ. 6.50 கோடிக்குத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ்.
2022 முதல் தான் சன்ரைசர்ஸ் லெவனில் அவருக்குத் தொடர்ந்து இடம் கிடைத்தது. 2 அரை சதங்களுடன் 426 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கேவுக்கு எதிராக 50 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். அதுவே அவருடைய முதல் ஐபிஎல் அரை சதம்.
யுவ்ராஜ் சிங் போல சன்ரைசர்ஸ் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த பிரையன் லாராவும் தனக்கு மிகுந்த ஊக்கம் அளித்ததாகக் கூறுகிறார் அபிஷேக் சர்மா. கோல்ஃப் கற்றுக்கொள். சிக்ஸருக்கு பேட்டை சுழற்ற இந்த விளையாட்டு உனக்கு உதவும் என்று அறிவுறுத்தியுள்ள லாரா, உன் திறமையால் பேரும் புகழும் அடையப் போகிறாய். உன் ஆட்டத்தைப் பார்க்க மைதானத்தில் ரசிகர்கள் வந்து குவிவார்கள் என்று பாராட்டியும் அபிஷேக் சர்மாவின் எதிர்காலத்தை லாரா கணித்துள்ளார்.
2023 சையத் முஷ்டாக் அலி மற்றும் 2024 ஐபிஎல் என இரு போட்டிகளும் அபிஷேக் சர்மாவின் திறமையை முழுமையாக வெளிக்கொண்டு வந்தன. பஞ்சாப் வெற்றி பெற்ற 2023 சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 485 ரன்களுடன் அதிகமாக ரன்கள் எடுத்த பேட்டர்களில் 2-வது இடம் பிடித்தார் அபிஷேக் சர்மா. ஆனால் அவருடைய ஸ்டிரைக் ரேட்டான 192.46 அருகில், யாராலும் வரமுடியவில்லை. அதேபோல 2024 ஐபிஎல்-லில் பட்டையைக் கிளப்பினார் அபிஷேக் சர்மா. டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்து விளையாடியது அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தை இன்னும் மெருகேற்றியது. எதிரணிகள் சன்ரைசர்ஸ் அணியைக் கண்டு நடுங்கும் அளவுக்கு அதிரடியான தொடக்கத்தை இருவரும் அளித்தார்கள். 2024 ஐபிஎல்-லில் 16 ஆட்டங்களில் 484 ரன்கள் எடுத்தார் அபிஷேக் சர்மா. இத்தனைக்கும் ஒருமுறை கூட 28 பந்துகளுக்கு மேல் விளையாடவில்லை. ஸ்டிரைக் ரேட் - 204.21. கடந்த ஐபிஎல்-லில் 350 ரன்களுக்கு மேல் எடுத்த பேட்டர்களில் வேறு யாருக்கும் இந்த ஸ்டிரைக் ரேட் கிடையாது. 42 சிக்ஸர்களுடன் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்கிற பெருமையையும் அடைந்தார். இதுவரை ஒரு ஐபிஎல் போட்டியில் எந்தவொரு இந்திய பேட்டரும் இத்தனை சிக்ஸர்களை அடித்ததில்லை.
உடனடி பலன் கிடைத்தது. ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இந்திய டி20 அணிக்குத் தேர்வானார் அபிஷேக் சர்மா. இத்தனைக்கும் பிரித்வி ஷா, ஷுப்மன் கில், அர்ஷ்தீப் சிங்குக்குப் பிறகுதான் தாமதமாக இந்திய அணிக்கு அவர் தேர்வானார். ஜிம்பாப்வேயில் 46 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தை அடித்து கணக்கைத் தொடங்கினார் அபிஷேக் சர்மா.
2024 சையத் முஷ்டாக் அலி கோப்பையில் மேகாலயாவுக்கு எதிராக 28 பந்துகளில் சதமடித்து டி20 கிரிக்கெட் வரலாற்றில் விரைவாக எடுத்த 2-வது சதம் என்கிற சாதனையைப் படைத்தார். 2025 ஐபிஎல் போட்டிக்காக ரூ. 14 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அதிரடியாக விளையாடி இந்திய அணியில் தனது இடத்தை மேலும் உறுதி செய்துகொண்டுள்ளார். வான்கடே அதிரடிச் சதத்தை கிரிக்கெட் உலகமே கொண்டாடியது. இதுவரை இந்தியாவுக்காக இதுவரை 17 டி20யில் விளையாடி 2 சதங்கள், 2 அரை சதங்களுடன் 535 ரன்கள் எடுத்துள்ளார் அபிஷேக் சர்மா. ஸ்டிரைக் ரேட் - 193.84.
அபிஷேக் சர்மாவால் ஜெயிஸ்வாலும் ஷுப்மன் கில்லும் இந்திய டி20 அணியில் நுழைய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நாங்கள் 16 வயதுக்குட்பட்ட அணியில் இருந்து விளையாடி வருகிறோம். எங்களின் ஒரே கனவு இந்தியாவுக்காக விளையாடுவதுதான். மூவருமே அக்கனவைச் சாத்தியமாக்கியுள்ளோம். எங்களுக்குள் எவ்விதப் போட்டியும் இல்லை என்கிறார் அபிஷேக் சர்மா.
அதிரடி பேட்டர், நம்பகமான சுழற்பந்து வீச்சாளர் என்று பெயர் எடுத்துள்ளார் அபிஷேக் சர்மா. வான்கடேவில் நிகழ்த்திய வானவேடிக்கைகள் காலம் முழுக்கத் தொடரட்டும்.