யார் இந்த நிதிஷ் குமார் ரெட்டி?

தந்தையின் நிலைமையையும், தியாகத்தையும் பார்த்து கிரிக்கெட்டில் தீவிரமாகப் பயிற்சி பெற ஆரம்பித்தார்.
யார் இந்த நிதிஷ் குமார் ரெட்டி?
2 min read

மெல்போர்ன் டெஸ்டில் நம்பமுடியாத விதத்தில் விளையாடி சதமடித்துள்ளார் நிதிஷ் குமார் ரெட்டி. 21 வயது வீரரின் இந்தச் சாதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குப் புது உற்சாகத்தைத் தந்துள்ளது.

ஆந்திராவில் 2003-ல் பிறந்த நிதிஷ் குமார் ரெட்டி, இளம் வயதிலேயே சிறப்பாக விளையாடி, 16 வயதுக்கான சிறந்த வீரர் விருதை பிசிசிஐயிடமிருந்து பெற்றார்.

2016-ல் ஆந்திரா கிரிக்கெட் சங்கம் 13 வயது நிதிஷ் குமாரை தேர்வு செய்திருந்தது. அப்போது, ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நிதிஷ் குமாரின் தந்தை முத்யாலு, தன்னை ராஜஸ்தானுக்குப் பணியிடை மாற்றம் செய்ததற்காக, மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முன்னிட்டு வேலையை ராஜினாமா செய்தார்.

பிறகு விசாகப்பட்டினத்தில் ஃபைனான்ஸ் வியாபாரத்தில் ஈடுபட்டபோது அதிலும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் உறவினர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார் முத்யாலு. அப்போதுவரை கிரிக்கெட்டை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே பார்த்திருந்த நிதிஷ் குமார், தந்தையின் நிலைமையையும் தியாகத்தையும் பார்த்து கிரிக்கெட்டில் தீவிரமாகப் பயிற்சி பெற ஆரம்பித்தார்.

வீட்டிலிருந்து 700 கி.மீ. தள்ளியிருந்த கடப்பாவுக்குச் சென்று பயிற்சி எடுத்துக்கொண்டார் நிதிஷ் குமார். நடுவில் பந்துவீச்சை விட்டுவிட்டு பேட்டிங்கில் கவனம் செலுத்த முயன்றபோது பயிற்சியாளர்களின் நல்ல அறிவுரையால் பந்துவீச்சில் மீண்டும் கவனம் செலுத்தினார். இதனால் ஒரு ஆல்ரவுண்டராக செல்லுமிடமெல்லாம் மதிக்கப்பட்டார்.

2020-ல் கேரளாவுக்கு எதிராக ரஞ்சியில் அறிமுகமானார். ஐபிஎல் போட்டியில் கிடைத்த ஒப்பந்தம்தான் நிதிஷ் குமாரின் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டது. 2023 ஐபிஎல் போட்டிக்கு முன்பு நிதிஷ் குமாரை சன்ரைசர்ஸ் அணி, ரூ. 20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. அந்த வருடம் அவர் பெரிதாகத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

2024 ஐபிஎல், நிதிஷ் குமாருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. 13 ஆட்டங்களில் 303 ரன்களும் 3 விக்கெட்டுகளும் எடுத்து சன்ரைசர்ஸ் அணியின் முக்கியமான வெற்றிகளுக்குக் காரணமாக இருந்தார். இதனால் இந்தமுறை ரூ. 6 கோடிக்கு நிதிஷ் குமாரைத் தக்கவைத்தது சன்ரைசர்ஸ்.

இதன் காரணமாக இந்திய டி20 அணிக்குத் தேர்வான நிதிஷ் குமார், வங்கதேசத்துக்கு எதிராகச் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். முதல்தர கிரிக்கெட்டில் 21 ஆட்டங்களில் விளையாடி பெரிதளவில் கவனம் ஈர்க்காமல் இருந்தாலும், டி20யில் ஆல்ரவுண்டராக அறியப்பட்டதால் பிஜிடி தொடருக்கான இந்திய அணியில் நிதிஷ் குமார் இடம்பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக விளையாடாமல் போனாலும் முதல் டெஸ்டில் அறிமுகமானபோது எல்லோருக்கும் இன்னொருமுறை ஆச்சர்யம் ஏற்பட்டது. பிஜிடி தொடரில் இந்திய அணியின் நான்காவது பந்துவீச்சாளராகத் தேர்வான நிதிஷ் குமார் பேட்டிங்கில் அசத்திக் கொண்டிருக்கிறார்.

மெல்போர்னில் 80,000 ரசிகர்கள் மற்றும் தனக்காக வேலை உள்பட வாழ்க்கையில் நிறைய தியாகங்களைச் செய்த தன் தந்தைக்கு முன்பு அட்டகாசமாக விளையாடி சதமடித்தார் நிதிஷ் குமார். இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் (284 ரன்கள்) என்கிற பெருமையையும் பெற்றுள்ளார்.

21 வயதில் ஒரு குட்டி வாழ்க்கை வரலாறு எழுதும் அளவுக்குச் சாதித்துவிட்டார் நிதிஷ் குமார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in