
லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டவர் நடுவர் பால் ரைஃபில்.
முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான 59 வயது ரைஃபில், ஆஸ்திரேலியாவுக்காக 1992 முதல் 1999 வரை 35 டெஸ்டுகளிலும் 92 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடி 210 சர்வதேச விக்கெட்டுகளை எடுத்தார். 1999 உலகக் கோப்பையை வென்ற ஆஸி. அணியில் ரைஃபிலும் இடம்பெற்றிருந்தார்.
1999-ல் ஓய்வு பெற்ற ரைஃபில் 2004-05-ல் ஆஸி. உள்ளூர் போட்டிகளில் நடுவராக அறிமுகமானார். 21 முதல் தர ஆட்டங்களில் நடுவராகப் பணியாற்றிய பிறகு 2008-ல் முதல் ஆஸி. முன்னாள் வீரராக ஐசிசி சர்வதேச நடுவர் பட்டியலில் இணைக்கப்பட்டார். பிறகு 2013-ல் எலைட் நடுவர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
லார்ட்ஸ் டெஸ்டில் ரைஃபிலின் முடிவுகளை இந்திய முன்னாள் வீரர்கள் அனில் கும்ப்ளேவும் அஸ்வினும் விமர்சித்தார்கள். பால் ரைஃபிலின் முடிவுகளை ஐசிசி கண்காணிக்க வேண்டும் என்றும் அஸ்வின் கூறினார். ரசிகர்கள், நிபுணர்களும் பலரும் ரைஃபிளின் முடிவுகள் குறித்து கேள்விகளை எழுப்பினார்கள்.
பால் ரைஃபில் நடுவராகச் செயல்பட்ட இந்தியாவின் 39 ஆட்டங்களில் 23-ல் இந்தியா வென்றுள்ளது. சமீபத்தில் இந்திய அணி வென்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்றின்போதும் பால் ரைஃபில் கள நடுவராகப் பணியாற்றினார்.
பால் ரைஃபிள் 111 டெஸ்டுகள், 159 ஒருநாள் மற்றும் 50 சர்வதேச டி20-களில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். இதில் கள நடுவராக 75 டெஸ்டுகள், 97 ஒருநாள் மற்றும் 33 சர்வதேச டி20-களில் பணியாற்றியுள்ளார்.
Ind v Eng | Ind vs Eng | India v England | India vs England | Paul Reiffel | Lord's Test | Ashwin