
மெல்போர்னில் பாக்ஸிங் டே டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக 19 வயதில் அறிமுகம். ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்டில் களமிறங்கும் நான்காவது இளம் வீரர். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பும்ரா பந்தில் ரேம்ப் ஷாட், ரிவர்ஸ் ஸ்கூப்புக்கு முயற்சிக்கிறார். பலனில்லை.
மீண்டும் முயற்சிக்கிறார். பும்ரா பந்தில் பவுண்டரிகளும், சிக்ஸரும் கிடைக்கிறது. 2021-க்கு பிறகு டெஸ்டில் பும்ரா ஓவரில் அடிக்கப்பட்ட முதல் சிக்ஸர். அதாவது டெஸ்டில் 4,483 பந்துகளுக்குப் பிறகு முதல் சிக்ஸரை பும்ரா கொடுக்கிறார். அதுமட்டுமா, தனக்குப் பிடித்தமான வீரராகச் சொன்ன விராட் கோலியிடம் துணிச்சலாக சண்டைக்கு நிற்கிறார்.
யார் இந்த பயமறியாத இளம் கன்று?
நியூ சௌத் வேல்ஸில் கிரீக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் சாம் கோன்ஸ்டஸ். ஷேன் வாட்சனால் ஈர்க்கப்பட்ட கோன்ஸ்டஸ், அவரிடமே ஆலோசனைகளைப் பெற்று வருகிறார்.
பள்ளிப் பருவத்திலிருந்தே பேட்டிங்கில் கலக்கி வரும் இவர், 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பையின்போது, பிடித்தமான வீரராக ஸ்டீவ் ஸ்மித்தைக் காட்டிலும் விராட் கோலியைத் தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சதமும் அடித்தார்.
நடப்பு ஷெஃபீல்டு ஷீல்ட் முதல் ஆட்டத்தில் சௌத் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரு இன்னிங்ஸிலும் சதமடித்து கவனம் ஈர்த்தார் சாம் கோன்ஸ்டஸ். ரிக்கி பாண்டிங்குக்குப் பிறகு இந்தச் சாதனையை நிகழ்த்தும் இளம் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இதன் தொடர்ச்சியாக கான்பெராவில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற இளஞ்சிவப்பு பந்தின் பயிற்சி ஆட்டத்தில் பிரதமர் லெவன் அணிக்காகக் களமிறங்கினார். அப்போதே இந்தியப் பந்துவீச்சாளர்களை அமர்க்களமாகக் கையாண்ட சாம் கோன்ஸ்டஸ், சதமடித்து தான் யார் என்பதை நிரூபித்துக் காட்டினார். இவர் நிச்சயமாக ஆஸ்திரேலிய அணிக்காகக் களமிறங்கக்கூடும் எனப் பேச்சுகள் எழுந்தன.
இந்த ஃபார்மை தக்கவைத்துக்கொண்ட கோன்ஸ்டஸ், ஷெஃபீல்டு ஷீல்டில் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 88 ரன்கள் எடுத்தார். பிக் பாஷ் போட்டியில் 27 பந்துகளில் 56 ரன்கள் விளாசி சிட்னி தண்டர்ஸ் வெற்றிக்கு உதவினார்.
இதற்கு ஏதுவாக முதல் மூன்று டெஸ்டுகளில் பும்ரா பந்தில் தடுமாறி நேதன் மெக்ஸ்வீனி சொதப்ப, கடைசி இரு டெஸ்டுகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் கோன்ஸ்டஸ் சேர்க்கப்பட்டார்.
19 வயதில் பாக்ஸிங் டே டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகி பும்ரா ஓவரில் ஸ்கூப் ஷாட்கள், 18 ரன்கள் விளாசி, 52 பந்துகளில் அரைசதம் அடித்து, கிரிக்கெட் உலகுக்கு தன் வருகையை அதிரடியாகப் பதிவு செய்துள்ளார் கோன்ஸ்டஸ்.
பிஜிடி தொடரில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பணமாகத் திகழ்ந்து உச்சத்தில் இருக்கும் பும்ரா, 4,483 பந்துகளுக்குப் பிறகு டெஸ்டில் ஒரு சிக்ஸரை கொடுக்கிறார் என்றால், அந்த சிக்ஸரை அடித்தவர் சாதாரண வீரராக இருந்துவிட முடியுமா என்ன?