
உத்தரப் பிரதேச மாநிலம் கேக்ராவில் அக்டோபர் 25, 1999-ல் பிறந்தார் சச்சின் யாதவ். கிரிக்கெட்டில் ஆர்வம் மிகுந்தவரான சச்சின் யாதவ், வேகப்பந்துவீச்சாளராக விரும்பினார். காலப்போக்கில் கையிலிருந்த பந்து இருந்த இடத்தை ஈட்டி நிரப்பியது.
19 வயதிலிருந்து ஈட்டி எறிதல் வீரராக அவதாரம் எடுக்கத் தொடங்கினார். 6.5 அடி உயரம் கொண்டவர்.
பெங்களூருவில் கடந்தாண்டு நடைபெற்ற 63-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்பில் 80 மீட்டர் தூரத்தைக் (80.04 மீட்டர்) கடந்து ஈட்டியை எறிந்து கவனம் பெறத் தொடங்கினார். தொடர்ந்து கொச்சியில் நடைபெற்ற ஃபெடெரேஷன் கோப்பையில் 83.86 மீட்டருக்கு வீசி வெற்றி பெற்றார். தேசிய விளையாட்டுகள் போட்டியில் 84.39 மீட்டருக்கு ஈட்டியை எறிந்து பட்டம் வென்றார்.
அடுத்தடுத்து உயரங்களைத் தொட்டு வந்த சச்சின் யாதவ் 2025-ல் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார். இதுதான் இவருக்கு சர்வதேச அளவிலான போட்டியில் அறிமுகம். பாகிஸ்தான் அர்ஷத் நதீம் உள்ளிட்டோருடன் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கத்தை (85.16 மீட்டர்) வென்றார். 85 மீட்டரை கடந்த மூன்றாவது இந்தியர் எனும் சாதனையை சச்சின் யாதவ் படைத்தார். இடையில் நீரஜ் சோப்ரா கிளாசிக்கல் மீட் போட்டி நடைபெற்றது. இதில் 82.33 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து நான்காவது இடத்தைப் பிடித்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் தனது அற்புதமான ஆட்டத்தைத் தொடர்ந்தார் சச்சின் யாதவ். புதன்கிழமை நடைபெற்ற தகுதிச் சுற்றில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா இடம்பெற்றிருந்த குரூப் ஏ-வில் தான் சச்சின் யாதவும் இடம்பெற்றிருந்தார். இதில் 83.67 மீட்டருக்கு ஈட்டியை எறிந்து 10-வது இடத்தைப் பிடித்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
வியாழக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா மற்றும் பாகிஸ்தான் அர்ஷத் நதீம் மீது பெரியளவில் கவனம் இருந்தது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு இருவரும் மோதிக்கொள்வது இதுவே முதன்முறை. இவர்கள் இருவருமே இப்போட்டியில் சோபிக்கத் தவறினார்கள். நடப்பு சாம்பியன் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 84.03 மீட்டருக்கு வீசி 8-வது இடத்தையே பிடித்தார். அர்ஷத் நதீம் அதிகபட்சமாக 82.75 மீட்டருக்கு வீசி 10-வது இடத்தையே பிடித்தார். இறுதிச் சுற்றிலிருந்து இருவரும் வெளியேறினார்கள்.
நீரஜ் சோப்ரா ஏமாற்றிவிட்டார் என்ற சோகத்தில் இருந்தபோது, பதக்கத்துக்கான வாய்ப்பைத் தக்கவைத்துக்கொண்டிருந்தார் மற்றொரு இந்திய வீரர் சச்சின் யாதவ். கடைசி முயற்சி வரை சச்சின் யாதவ் போராடினார். இறுதி முயற்சியில் இவரால் 80.95 மீட்டர் தூரத்துக்கே ஈட்டியை வீச முடிந்தது. அதிகபட்சமாக 86.27 மீட்டர் தூரத்துக்கு வீசிய சச்சின் யாதவ் 40 செ.மீ. தூரத்தில் நான்காவது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம், பதக்கம் வெல்லும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.
நீரஜ் சோப்ரா இல்லாவிட்டால் என்ன, நான் இருக்கிறேன் என கடைசி வரை போராட்டி இந்தியாவுக்கு நம்பிக்கையளித்திருக்கிறார் மற்றொரு இந்திய நட்சத்திரம் சச்சின் யாதவ்.
கிரிக்கெட்டிலிருந்து வந்ததாலோ என்னவோ சச்சின் யாதவின் ஆதர்சமாக இருப்பது எம்எஸ் தோனி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா. அடுத்தடுத்த ஈட்டி எறிதல் போட்டிகளில் இந்திய ரசிகர்களின் கண்கள் நீரஜ் சோப்ராவை மட்டுமே தேடிக் கொண்டிருக்காது. இந்தியாவுக்கான பதக்க வாய்ப்புகளை உருவாக்க நீரஜ் சோப்ராவுடன் சச்சின் யாதவ் பெயரில் புதிய ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது.
Neeraj Chopra | Arshad Nadeem | Sachin Yadav | World Athletics Championships Final | World Athletics Championships |