
லக்னெள அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ்தான் தற்போதைய ஐபிஎல் நட்சத்திரம்.
பஞ்சாப் அணிக்கு எதிராக அதிவேகத்தில் இவர் பந்துவீசியது இந்திய ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. இதுவரை கேள்விப்படாத ஒரு பெயர், பார்க்காத பந்துவீச்சு, எங்கிருந்து இவர் முளைத்தார்?
தில்லியைச் சேர்ந்த 21 வயது மயங்க் யாதவ் இதுவரை 1 முதல்தர ஆட்டம், 10 டி20, 17 லிஸ்ட் ஏ ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 50 ஓவர் 2023 தியோதர் கோப்பைப் போட்டியில் வடக்கு மண்டலத்துக்காக விளையாடி 5 இன்னிங்ஸில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் ராகுல் திரிபாதி ஸ்டம்புகளை மயங்க் தகர்த்தது பேசுபொருளானது.
ஐபிஎல் 2022 ஏலத்தில் மயங்க் யாதவை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது லக்னெள.
இன்று, பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் ஐபிஎல்-லில் அறிமுகமானார் மயங்க் யாதவ். யாருமே எதிர்பாராத வகையில் 2-வது ஓவரின் முதல் பந்தில் மணிக்கு 155 கி.மீ. வேகத்தில் பந்துவீசியபோதுதான் யார் இவர் என்று அனைவரும் மயங்கைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். அதே ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த பேர்ஸ்டோவை வீழ்த்தியதன் மூலம் வலுவாகச் சென்று கொண்டிருந்த தொடக்கக் கூட்டணியை உடைத்தார். ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது.
அடுத்த ஓவரில் பிரப்சிம்ரன் சிங், மயங்கின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டைப் பறிகொடுத்தார். 3-வது ஓவரில் ஜிதேஷ் சர்மாவின் விக்கெட் கிடைத்தது. கடைசியில் 4 ஓவர்களில் 27 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து மறக்க முடியாத அனுபவம் பெற்றார் மயங்க்.
இவர் பந்துவீச வரும் முன்பு பஞ்சாப் அணி, 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. மயங்க் யாதவ் தனது 4 ஓவர்களையும் முடித்திருந்தபோது 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் தான் எடுத்திருந்தது பஞ்சாப். மயங்கைக் கடைசிவரை பஞ்சாப் அணி பேட்டர்களால் எதிர்கொள்ள முடியவே இல்லை.
கடந்த ரஞ்சிப் பருவத்தில் காயம் காரணமாக விளையாடாமல் போன மயங்க் யாதவ், இந்தமுறை முதல் ஆட்டத்திலேயே சிறப்பாகப் பந்துவீசி அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவியுள்ளார்.
ஆட்டம் முடிந்தபிறகு பரிசளிப்பு விழாவில், மயங்கின் பந்துவீச்சைப் பற்றி விரிவாகவே பேசினார் பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவன். அவருடைய வேகமான பந்துவீச்சு எங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. மயங்க் ஓவரில் அடிக்க முயலவேண்டாம் என்று ஜிதேஷ் சர்மாவிடம் கூறினேன். ஆனால் மற்ற பந்துவீச்சாளர்களும் நன்றாகப் பந்துவீசினார்கள் என்றார். இதற்கு மேல் என்ன வேண்டும்?
சமீபத்தில், சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் 150 கி.மீ. வேகத்தைக் காண்பித்தார். இப்போது முதல் ஆட்டத்திலேயே தன் பெயரை உலகறியச் செய்துவிட்டார். திறமைசாலிகளுக்குச் செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பதைத் தனியாக வேறு சொல்லவேண்டுமா?