முதலிலேயே தடுமாறும் ராஜஸ்தான்: ஏலத்திலிருந்து ஆரம்பித்ததா சறுக்கல்?

ஜெய்ப்பூரிலேயே எல்லா ஆட்டங்களையும் விளையாடாமல் 2 ஆட்டங்களை குவஹாட்டியிலும் விளையாடுகிறது ராஜஸ்தான் அணி.
முதலிலேயே தடுமாறும் ராஜஸ்தான்:
ஏலத்திலிருந்து ஆரம்பித்ததா சறுக்கல்?
ANI
2 min read

ஐபிஎல் 2025 ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மட்டும் மோசமாக ஆரம்பித்துள்ளது. விளையாடிய முதல் இரு ஆட்டங்களிலும் மோசமாகத் தோற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது ராஜஸ்தான்.

2022-ல் 2-வது இடமும் 2023-ல் 5-வது இடமும் பிடித்த ராஜஸ்தான் அணி கடந்த வருடம் ஃபிளேஆஃப்புக்குத் தகுதியடைந்து 3-வது இடம் பிடித்தது. இந்தமுறை இரு ஆட்டங்களிலும் விளையாடி தோற்றதைப் பார்க்கும்போது கடைசி இடம் தான் கடைசி வரைக்கும் நீடிக்குமா என்கிற சந்தேகம் ஆர்ஆர் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

இந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், காயம் காரணமாக மூன்று ஆட்டங்களில் பேட்டராக மட்டுமே விளையாடுவார் என்கிற அறிவிப்பே முதல் பின்னடைவை உருவாக்கியது. இளம் வீரர் ரியான் பராக் கேப்டன் பொறுப்பை ஒழுங்காகச் சுமக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.

ராஜஸ்தானின் பிரச்னை இப்போதல்ல, ஏலத்துக்கு முன்பே ஆரம்பித்து விட்டது என்பதுதான் அதன் தடுமாற்றத்துக்கான முதற்காரணம்.

ஏலத்துக்கு முன்பு சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெயிஸ்வாலை தலா ரூ. 18 கோடிக்கும் ரியான் பராக், துருவ் ஜுரெலை தலா ரூ. 14 கோடிக்கும் ஷிம்ரோன் ஹெட்மையரை ரூ. 11 கோடிக்கும் சந்தீப் சர்மாவை ரூ. 4 கோடிக்கும் தக்கவைத்தது ராஜஸ்தான் ராயல்ஸ். இந்தப் பட்டியல் வெளியானபோதே பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

ஆர்ஆர் அணியின் பெரிய பலமாகச் சமீபத்திய வருடங்களில் இருந்தவர் ஜாஸ் பட்லர். 2018 முதல் 2024 வரை ராஜஸ்தானுக்காக விளையாடிய பட்லர் தான் இந்தக் காலகட்டத்தில் அந்த அணியில் அதிக ரன்கள் எடுத்த பேட்டர். இந்த வருடம் 5 பேட்டர்களைத் தக்கவைத்தும் அவர்களில் ஒருவராகக் கூட பட்லர் இடம்பெறவில்லை.

மேலும் டிரெண்ட் போல்ட், சஹல், அஸ்வின் போன்றோரையும் தக்கவைக்காதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சரி, மெகா ஏலத்திலாவது இவர்களை மீட்டுவிடுவார்கள் என்று பார்த்தால் அதுவும் நடக்கவில்லை. இதனால் புதிய பந்துவீச்சைப் படையை ராஜஸ்தான் அணி எப்படி உருவாக்கப் போகிறது என்கிற கேள்வி ஏலம் முடிந்தபிறகே எழத் தொடங்கியது.

சஹல், அஸ்வின் என இரு இந்தியச் சுழற்பந்துவீச்சாளர்களுக்குப் பதிலாக இலங்கையின் ஹசரங்கா, தீக்‌ஷனாவை ஏலத்தில் தேர்வு செய்தது ராஜஸ்தான். இந்திய சுழற்பந்து ஜாம்பவான்களுக்கு வெளிநாட்டு வீரர்கள் எப்படி ஈடாக முடியும்? 4 வெளிநாட்டு வீரர்களை மட்டும் விளையாடவைக்க முடியும் என்கிற சூழலில் அணித் தேர்வில் அது எவ்வளவு சிக்கலை ஏற்படுத்தும்? டிரென்ட் போல்டுக்கு மாற்றாக ஜோஃப்ரா ஆர்ச்சரை ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டார். ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டே, ஹசரங்கா, தீக்‌ஷனா என இந்த நான்கு பந்துவீச்சாளருக்கு மட்டும் ரூ. 28.65 கோடியைச் செலவிட்டது ராஜஸ்தான். வேறு வெளிநாட்டு பேட்டர்கள் யாரையும் ஏலத்தில் தேர்வு செய்யவில்லை. ஏலத்தின்போது இதெல்லாம் அதிசயமாகப் பார்க்கப்பட்டது.

இம்முறை பட்லர் இல்லாததால், சஞ்சு சாம்சன் தொடக்க பேட்டராகவும் ரியான் பராக் 3-வது பேட்டராகவும் களமிறங்குகிறார்கள். அடுத்தது நிதிஷ் ராணா. 5-வதாகக் கூட ஹெட்மையர் களமிறங்குவதில்லை என்பதுதான் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. சன்ரைசர்ஸுக்கு எதிராக 6-வதாகவும் கேகேஆருக்கு எதிராக 8-வதாகவும் களமிறக்கப்பட்டார் ஹெட்மையர். இதற்காகவே அவரை ரூ. 11 கோடிக்குத் தேர்வு செய்தீர்கள் என்று கடுமையான விமர்சனங்களை தற்போது எதிர்கொண்டுள்ளது ராஜஸ்தான்.

மிகவும் எதிர்பார்த்த ஜெயிஸ்வால், கேப்டன் ரியான் பராக்கின் பேட்டிங் தோல்விகள் அணியின் முதன்மைத் திட்டங்களைத் தவிடுபொடியாக்கிவிட்டன. முதல் ஆட்டத்தில் துருவ் ஜுரெல் 35 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆச்சர்யப்படுத்தினார். அவரை அடுத்த ஆட்டத்தில் 6-வதாகக் களமிறக்கினார்கள். அவருக்கு முன்பு களமிறங்கிய ஹசரங்கா மட்டுமல்ல இம்பாக்ட் வீரராகக் கொண்டுவரப்பட்ட பேட்டர் ஷுபம் துபேவும் சொதப்பவே, மாற்றுத் திட்டம் இன்றி தடுமாறிப் போய்விட்டது ராஜஸ்தான்.

முதலில் பேட்டிங் செய்கிற எல்லா அணிகளும் 7 பேட்டர்களுடன் களமிறங்கும்போது ராஜஸ்தான் மட்டும் 6 பேட்டர்களுடன் மட்டுமே களமிறங்குகிறது. இதனால் இம்பாக்ட் வீரரை முதலிலேயே பயன்படுத்த வேண்டிய நெருக்கடியும் அந்த அணிக்கு உள்ளது. இந்த உத்தி கடந்தமுறை ஓரளவு உதவினாலும் இந்தமுறை பல்லிளித்துவிட்டது. தில்லி அணியில் அஷுதோஷ் சர்மாவும் சிஎஸ்கேவில் தோனி 8-வதாகவும் களமிறங்கும்படியான வலுவான பேட்டிங் ஆர்ஆர் அணிக்கு இம்முறை அமையவில்லை. பஞ்சாப் அணியில் 9 பேட்டர்கள் வரை விளையாடுகிறார்கள். பேட்டிங் ஆழமாக இல்லாததால் ராஜஸ்தான் பேட்டர்களால் மற்ற அணியினர் போல முதலில் இருந்தே அதிரடியாக விளையாடும் மனநிலை இல்லாமல் போய்விடுகிறது.

பிரதான வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் படு தோல்விகள் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. முதல் ஆட்டத்தில் 4 ஓவர்களில் 76 ரன்கள் கொடுத்து மோசமான சாதனையில் முதலிடம் பிடித்தார். கேகேஆருக்கு எதிராக ஆர்ச்சரும் ஹசரங்காவும் மிக மோசமாகப் பந்துவீசியதால் ராஜஸ்தானால் தலைநிமிரவே முடியாமல் போனது. இதுவரை பவர்பிளேயில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்கள் பந்துவீச்சாளர்கள்.

மேலும் ஜெய்ப்பூரிலேயே எல்லா ஆட்டங்களையும் விளையாடாமல் 2 ஆட்டங்களை குவஹாட்டியிலும் விளையாடுகிறது ராஜஸ்தான் அணி. அந்த ஆடுகளமோ நேற்று கேகேஆர் அணிக்குத்தான் பொருத்தமாக இருந்தது. இந்த ஏற்பாட்டுக்கு ராஜஸ்தான் அணி ஒப்புக்கொண்டிருக்கக் கூடாது என்று முன்னாள் ஆர்ஆர் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார். சென்னை, மும்பை போல ஒரே இடத்தில் அதாவது ஜெய்ப்பூரிலேயே அனைத்து ஆட்டங்களையும் ராஜஸ்தான் விளையாட வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது கிடையாது. ஆரம்பத்தில் மோசமாக விளையாடிய அணிகள் பிறகு மீண்டெழுந்து கோப்பையை வென்ற சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இனிமேலாவது ராஜஸ்தான் அணி நிறைய வெற்றிகளை அடைந்து புள்ளிகள் பட்டியலில் மேலேறி வரட்டும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in