
ஐபிஎல் 2025-ல் குவாலிஃபையர் 2-ல் பஞ்சாப் கிங்ஸிடம் தோல்வியடைந்தது பற்றி மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
ஐபிஎல் 2025 போட்டியின் குவாலிஃபையர் 2-ல் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் அஹமதாபாதில் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் குவித்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் குவித்து தோல்வியடைந்தது இதுவே முதன்முறை.
இந்தத் தோல்விக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா மிகவும் சோகமாகத் தென்பட்டார். ஜஸ்பிரித் பும்ரா, பஞ்சாப் வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் உள்ளிட்டோர் பாண்டியாவைத் தேற்றினார்கள். ஐபிஎல் 2025-ல் வெளியேறியது குறித்தும் பஞ்சாபுடன் தோற்றது குறித்து தலைமைப் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே விளக்கியுள்ளார்.
"ஐபிஎல் 2025 எங்களுக்கு நல்ல போட்டியாக அமைந்துள்ளது. நாங்கள் போட்டியைத் தொடங்கிய விதத்துக்குப் பிறகு ஓர் அணியாக ஒன்றிணைந்து உண்மையில் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம்.
பஞ்சாப் கிங்ஸ் எங்களைவிட சிறப்பாக விளையாடியதைத் தவிர இன்றும் நல்ல கிரிக்கெட்டை விளையாடியதாகவே நினைக்கிறேன். குறிப்பாக பேட்டிங்கில் 200 ரன்களுக்கு மேல் இலக்கை விரட்டும்போது அவர்களுடைய பேட்டிங் திடமாக இருந்தது. திட்டங்களை மிகச் சரியாகச் செயல்படுத்தினார்கள், அது எளிதானது அல்ல.
இரு கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டது என சில தவறுகளைச் செய்தோம். ஆனால், கிரிக்கெட் அப்படி தான் இருக்கும். முந்தைய ஆட்டங்களில் அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இருந்தது. இது நல்ல கிரிக்கெட் ஆட்டமாக இருந்தது. நாங்கள் சற்று பின்தங்கிவிட்டோம், அவ்வளவு தான்.
எல்லா பகுதிகளிலும் அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். நாங்களும் மீண்டு வந்து விக்கெட்டுகளை வீழ்த்தினோம். நடு ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தினோம். 10-வது ஓவருக்கு பிறகு எங்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அந்த 4-5 ஓவர்களில் அழுத்தத்தை எங்களால் தொடர்ந்து கொடுக்க முடியாமல் போனது. இந்தத் தருணத்தில் தான் நேஹால் வதேரா மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் கூட்டணி ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்துச் சென்றது.
நாங்களும் பந்தில் வேகத்தைக் குறைத்து வீசினோம். ஆனால், முன்பே சொன்னது போல திட்டங்களைச் செயல்படுத்தியதில் குறைபாடு இருந்தது. இதை நாங்கள் ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஐபிஎல் போட்டி முழுக்க யார்க்கர் பந்துகளைச் சரியாக வீசி வந்தோம். இன்று அந்த யார்க்கர்களை சரியாக வீசி செயல்படுத்த முடியவில்லை. எனவே, திட்டங்களைச் செயல்படுத்துவதில் தான் பிரச்னை. கிரிக்கெட்டில் இது நிகழும். அவர்களும் எங்களை நெருக்கடிக்குள்ளாக்கினார்கள். நடு ஓவர்களில் பஞ்சாப் சிக்ஸர்கள் அடித்து நெருக்கடி கொடுத்தார்கள். இதுபோன்ற சூழல்களில் இதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், நாங்கள் அதைச் செய்யவில்லை" என்றார் மஹேலா ஜெயவர்தனே.