சதத்தைத் தவறவிட்ட ஷ்ரேயஸ்: ஷஷாங்கிடம் பேசியது என்ன?
ANI

சதத்தைத் தவறவிட்ட ஷ்ரேயஸ்: ஷஷாங்கிடம் பேசியது என்ன?

"அடுத்த ஆட்டத்தில் நான் சதமடித்துக் கொள்வேன்."
Published on

குஜராத் டைடன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்த ஷ்ரேயஸ் ஐயர், ஷஷாங் சிங்கிடம் பேசியது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைடன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அஹமதாபாதில் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. குஜராத் டைடன்ஸ் 232 ரன்கள் மட்டுமே எடுத்து 11 ரன்களில் தோல்வியடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 19-வது ஓவர் முடிவில் 97 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆனால், கடைசி ஓவரை எதிர்கொண்ட ஷஷாங் சிங் 6 பந்துகளையும் முழுமையாக எதிர்கொண்டு 5 பவுண்டரிகளை நொறுக்கினார். இதனால், கடைசி ஓவரில் ஸ்டிரைக்குக்கு வர முடியாத ஷ்ரேயஸ் ஐயரால் சதத்தை அடைய முடியவில்லை. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 42 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார்.

ஷ்ரேயஸ் ஐயரால் சதமடிக்க முடியாதது பற்றி ஷஷாங்க் சிங் பிறகு கூறுகையில், "உண்மையில் நான் ரன்னை பார்க்கவில்லை. முதல் பந்தை அடித்த பிறகு தான் பார்த்தேன். ஷ்ரேயஸ் 97 ரன்களில் இருந்தார். 1 ரன் ஏதும் எடுக்க வேண்டுமா என்று கேட்கச் சென்றேன். அவரே என்னிடம் வந்து, தன்னுடைய சதம் குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்றார். இதைச் சொல்ல பெரிய மனசும் துணிவும் தேவை. டி20யில் குறிப்பாக ஐபிஎல் போட்டியில் எளிதாக சதமடிக்க முடியாது. அது எனக்குக் கூடுதல் நம்பிக்கையை அளித்தது" என்றார்.

ஷஷாங் சிங்கிடம் நடத்திய உரையாடல் குறித்து ஷ்ரேயஸ் ஐயர் கூறுகையில், "ஷஷாங்கிடம் பெரிய ஷாட்களை விளையாடுமாறு கேட்டுக்கொண்டேன். எனது சதம் குறித்து கவலைகொள்ள வேண்டாம், அடுத்த ஆட்டத்தில் நான் சதமடித்துக் கொள்வேன் என்று கூறினேன்" என்றார் ஷ்ரேயஸ் ஐயர்.

பஞ்சாப் அணி தனது அடுத்த ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸை ஏப்ரல் 1 அன்று லக்னௌவில் எதிர்கொள்கிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in