கபில் தேவைச் சுட துப்பாக்கியுடன் அவர் வீட்டுக்குச் சென்றேன்: யுவ்ராஜ் சிங் தந்தை

"அடுத்த ஜென்மத்தில் நாம் சகோதரர்களாக இருப்போம் என கபில் தேவ் வாட்ஸ் ஆப்பில் செய்தி அனுப்பினார்."
கபில் தேவைச் சுட துப்பாக்கியுடன் அவர் வீட்டுக்குச் சென்றேன்: யுவ்ராஜ் சிங் தந்தை
படம்: https://www.youtube.com/@UNFILTEREDbySamdish
1 min read

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவைச் சுடுவதற்காக அவர் வீட்டுக்குத் துப்பாக்கியுடன் சென்றதாக யுவ்ராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

யுவ்ராஜ் சிங்கின் தந்தை இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட், 6 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அவ்வப்போது சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவிக்கும் யோக்ராஜ் சிங், தன்னை அணியிலிருந்து நீக்கியதால், கபில் தேவைத் துப்பாக்கியால் சுட முயன்றதாகக் கூறியுள்ளார்.

யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

"இந்தியா, வடக்கு மண்டலம் மற்றும் ஹரியாணாவின் கேப்டன் ஆன பிறகு கபில் தேவ் காரணமே இல்லாமல் என்னை அணியிலிருந்து நீக்கினார். கபில் தேவிடம் நான் இதுகுறித்து கேட்க வேண்டும் என என் மனைவி விரும்பினார். அவருக்குப் பாடம் புகட்டுவேன் என மனைவியுடன் கூறினேன்.

நான் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கபில் தேவ் வீட்டுக்குச் சென்றேன். அவர் தாயாருடன் வெளியே வந்தார். அவரைக் கடுமையாக விமர்சித்தேன். நீ (கபில் தேவ்) செய்த காரியத்துக்காக நிச்சயமாக நீ பதில் சொல்லியே ஆக வேண்டும்.

உன் (கபில் தேவ்) தலையில் தோட்டைவைத் துளைப்பதற்காக வந்தேன். ஆனால், பக்தியுணர்வு கொண்ட தாய் இருப்பதால், நான் அதைச் செய்யாமல் செல்கிறேன் என்றேன். மனைவியிடம் செல்லலாம் என்று கூறி புறப்பட்டு விட்டேன்.

அந்தத் தருணத்தில்தான் என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது என நான் முடிவு செய்தேன்.

பிஷன் சிங் பேடி உள்ளிட்டோர் எனக்கு எதிராக சதித் திட்டம் தீட்டினார்கள். பிஷன் சிங் பேடியை நான் மன்னிக்கவே மாட்டேன்.

அணியிலிருந்து நான் நீக்கப்பட்டபோது, தேர்வுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான ரவீந்திர சத்தாவிடம் நான் பேசினேன். நான் சுனில் காவஸ்கருக்கு நெருக்கமானவன் என்பதால், பிஷன் சிங் பேடி என்னைத் தேர்வு செய்ய ஆர்வம் காட்டவில்லை என ரவீந்திர சத்தா கூறினார். காரணம், நான் மும்பையில் கிரிக்கெட் விளையாடி வந்தேன், காவஸ்கருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தேன்.

2011-ல் இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது, ஒரேயொருவர் தான் அழுதுகொண்டிருந்தார். அது கபில் தேவ். உலகக் கோப்பையில் உன்னைவிட என் மகன் நன்றாகச் செயல்பட்டதாகக் கூறி செய்தித் தாளில் வெளியான செய்தியை கபில் தேவுக்கு அனுப்பிவைத்தேன்.

அடுத்த ஜென்மத்தில் நாம் சகோதரர்களாக இருப்போம் என கபில் தேவ் வாட்ஸ் ஆப்பில் செய்தி அனுப்பினார். அடுத்த ஜென்மத்தில் ஒரு தாய் வயிற்றில் பிறப்போம் என்றார். என்னைச் சந்திக்க அவருக்கு விருப்பம். ஆனால், ஒரு காழ்ப்பு உள்ளது, அது என்னை இன்னும் வேதனைப்படுத்துகிறது" என்றார் யோக்ராஜ் சிங்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in