வினேஷ் போகாட்டும் தொடரும் எடைப் பிரச்னைகளும்!

தடைகள் அனைத்தையும் உடைத்து, பதக்கத்தைத் தொடக்கூடிய தூரத்துக்கு உயர்ந்தார். ஒரே இரவில் 100 கிராம் கூடுதல் எடையால் அனைத்தையும் இழந்துள்ளார்.
வினேஷ் போகாட்டும் தொடரும் எடைப் பிரச்னைகளும்!
2 min read

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் இன்று காலை போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். காரணம், 100 கிராம் எடை கூடுதலாக இருந்தது.

வினேஷ் போகாட்டுக்கு ஆரம்பத்திலிருந்தே அவருடைய எடை பெரிய சிக்கலாக இருந்து வருகிறது.

வினேஷ் போகாட் தனது 22 வயதில் முதல் ஒலிம்பிக் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டார். வயது அதிகமாக ஆக, அவருடைய உடல் எடையும் அதிகரிக்க 50 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டார், பிறகு டோக்கியோ ஒலிம்பிக்ஸில் 53 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டார்.

வினேஷ் போகாட்டின் இயல்பான உடல் எடை 57 கிலோ. 53 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுவதற்கு வினேஷ் போகாட் கடுமையான உழைப்புகளைச் செலுத்த வேண்டியிருந்தது. எடைக் குறைப்பால் அடிக்கடி காயம் ஏற்படுவதும், காயத்திலிருந்து மீண்டு வர நேரம் எடுப்பதும் வினேஷ் போகாட்டுக்குச் சவாலாக இருந்தன. வினேஷ் போகாட் காயத்தால் அவதிப்பட, இளம் வீராங்கனை அன்திம் பங்கால் அதே நேரத்தில் எழுச்சி பெற்றார்.

கடந்தாண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற அன்திம் பங்கால் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தனக்கான இடத்தை உறுதி செய்தார். இதன் காரணமாக, பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வினேஷ் போகாட் 50 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டார்.

2016 ஒலிம்பிக் போட்டிகளில் 48 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட வினேஷ் போகாட் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெளியேறினார். காயமும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில் 50 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிச் சுற்றுடன் வெளியேறினார். அப்போது உடல்நலக் குறைவால் அவரால் முழுத் திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனது. இதன்பிறகு, 53 கிலோ எடைப் பிரிவில் விளையாடி வந்தார்.

வினேஷ் போகாட் இயல்பிலேயே 57 கிலோ எடை கொண்டவர். இவர் 53 கிலோ எடைப் பிரிவில் விளையாட வேண்டும் என்றாலே, எடையைக் குறைத்து கடுமையான உழைப்பைச் செலுத்த வேண்டியிருக்கும். 50 கிலோ எடைப் பிரிவு என்பது சந்தேகமின்றி சவாலானது. இதையும் மீறி மூன்றாவது முறையாக ஒலிம்பிக்ஸில் போட்டியிடும் வாய்ப்பில் நிச்சயம் பதக்கத்தை வென்றாக வேண்டும் என்ற துடிப்போடு வந்தார். முதல் ஆட்டத்தில் தோற்கடிக்க முடியாத வீராங்கனையாக வலம் வந்த ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தினார். பிறகு இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றார். தடைகள் அனைத்தையும் உடைத்து, பதக்கத்தைத் தொடக்கூடிய தூரத்துக்கு உயர்ந்தார். ஒரே இரவில் 100 கிராம் கூடுதல் எடையால் அனைத்தையும் இழந்துள்ளார்.

50 கிலோ எடை என்கிற தகுதியை அடைய வேண்டும் என்பதற்காக இரவு முழுக்க எதையும் உண்ணாமல் கடுமையான முயற்சிகளைப் போட்ட வினேஷ் போகாட், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 100 கிராம் எடையால் ஒலிம்பிக்ஸ் பதக்கத்தை இழந்த சோகத்தை ரசிகர்களாலேயே தாங்க முடியாமல் உள்ளது. வினேஷ் இதிலிருந்து விரைவில் மீண்டு வரவேண்டும், இன்னொருமுறை ஒலிம்பிக்ஸ் தடைகளை உடைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in