பிஜிடி டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஆல்ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.
மிட்செல் மார்ஷ் உடற்தகுதி தொடர்ந்து கவலையளித்து வருவதால், பியூ வெப்ஸ்டர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான பிஜிடி டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. பெர்த் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.
இருந்தபோதிலும், அணியில் எதுவும் மாற்றம் இருக்காது என பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு உறுதிபடுத்தினார். கேப்டன் பேட் கம்மின்ஸ் இதை நிலைப்பாட்டில் இருந்தாலும், மிட்செல் மார்ஷ் உடற்தகுதி குறித்து மட்டும் கவலை தெரிவித்திருந்தார்.
பெர்த் டெஸ்டில் அவர் 17 ஓவர்கள் வீசியது பிரச்னையாக மாறியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு டெஸ்டில் இவர் 17 ஓவர்கள் வீசியதில்லை என்கிறது புள்ளி விவரம். எனவே, அடிலெய்ட் டெஸ்டின்போது மார்ஷ் முழு உடற்தகுதியுடன் இருப்பது கேள்விக்குறியாகி உள்ளது.
பெர்த் டெஸ்டுக்கான 13 வீரர்கள் கொண்ட அணியில் ஜோஷ் இங்லிஸ் இடம்பெற்றிருந்தார். மார்ஷ் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், அடிலெய்டில் இவர் விளையாடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தச் சூழலில் தான் பியூ வெப்ஸ்டரை ஆஸ்திரேலியா தேர்வு செய்துள்ளது. இவர் சுழற்பந்துவீச்சாளராக இருந்து வேகப்பந்துவீச்சுக்கு மாறியவர்.
ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டி மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார் வெப்ஸ்டர். கடைசியாக நியூ சௌத் வேல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியில் 61 மற்றும் 49 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியா ஏ-வுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலியா ஏ அணிக்காக நான்கு இன்னிங்ஸில் 145 ரன்கள் எடுத்தார். இரு முறையும் இலக்கை வெற்றிகரமாக விரட்டியபோது, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். பந்துவீச்சில் 19.57 சராசரியுடன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தற்போதைய சூழலில் அடிலெய்ட் டெஸ்டில் மட்டும் வெப்ஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளார். மார்ஷ் இல்லாதபட்சத்தில் பேட்டிங்குடன் பந்துவீச்சுக்கான வாய்ப்பைக் கொடுப்பதால், இங்லிஸ் பதில் வெப்ஸ்டர் விளையாட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.