டபிள்யுசிஎல் இறுதிச் சுற்றில் பாகிஸ்தான்: இந்தியா விளையாட மறுத்ததால் விளைவு! | India Pakistan

"அரையிறுதிச் சுற்றிலிருந்து விலகுவதாக இந்திய சாம்பியன்ஸ் எடுத்துள்ள முடிவை நாங்கள் மதிக்கிறோம்."
டபிள்யுசிஎல் இறுதிச் சுற்றில் பாகிஸ்தான்: இந்தியா விளையாட மறுத்ததால் விளைவு!  | India Pakistan
படம்: படம்: https://www.wclcricket.com/teams/
2 min read

டபிள்யுசிஎல் அரையிறுதியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாட இந்தியா மறுத்ததால், இறுதிச் சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றது.

உலக சாம்பியன்ஷிப் லெஜன்ட்ஸ் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி யுவ்ராஜ் சிங் தலைமையில் களமிறங்கியது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கெடுக்கும் போட்டி இது. பாகிஸ்தான் அணி முஹமது ஹபீஸ் தலைமையில் களமிறங்கியுள்ளது.

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தானின் பதில் தாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளால் இரு நாடுகளுக்கிடையிலான உறவு மேலும் விரிசலடைந்தது. இதன் காரணமாக லீக் சுற்றின்போது, பாகிஸ்தானை எதிர்த்து விளையாட இந்திய வீரர்கள் சிலர் மறுப்பு தெரிவித்தார்கள். இதைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த ஜூலை 20 அன்று நடைபெறவிருந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்தப் போட்டியில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல் இருந்த இந்திய அணி, கடைசி லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. இந்திய அணி இந்த இலக்கை 13.2 ஓவர்களில் அடைந்து மிரட்டல் வெற்றியைப் பெற்றது.

இங்கிலாந்து அணியும் ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகளுடன் இருந்தது. எனினும், கடைசி லீக் ஆட்டத்தில் 13.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்ததால், நெட் ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளிய இந்திய அணி நான்காவது இடத்தைப் பிடித்து அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

பாகிஸ்தான் 5 ஆட்டங்களில் ஒரு தோல்வியைக்கூட சந்திக்காமல் 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா 4 வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

முதல் அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் மோதவிருந்தன. இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. இரு அரையிறுதி ஆட்டங்களும் வியாழக்கிழமை நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அரையிறுதிச் சுற்றிலும் பாகிஸ்தானை எதிர்த்து விளையாட இந்திய அணி மறுப்பு தெரிவித்துள்ளது. இதன்மூலம், போட்டியிலிருந்து விலகிய இந்திய அணி இறுதிச் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது. பாகிஸ்தான் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

இதுதொடர்பாக டபிள்யுசிஎல் போட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"விளையாட்டின் வலிமையே உத்வேகத்தை ஏற்படுத்துவது, உலகில் நேர்மறையான மாற்றத்தை உண்டாக்குவது தான் என்பதை நாங்கள் எப்போதும் நம்புகிறோம். எனினும், ரசிகர்களுக்காகவே அனைத்தும் செய்யப்படுவதால் மக்களின் உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பளிக்க வேண்டும்.

அரையிறுதிச் சுற்றிலிருந்து விலகுவதாக இந்திய சாம்பியன்ஸ் எடுத்துள்ள முடிவை நாங்கள் மதிக்கிறோம். அதேவேளையில், போட்டியிடத் தயாராக இருக்கும் பாகிஸ்தானின் தயார் நிலையையும் நாங்கள் மதிக்கிறோம்.

அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டு இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்படுகிறது. இதன் விளைவாக, பாகிஸ்தான் சாம்பியன்ஸ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

India Pakistan | WCL | World Championship of Legends | Ind v Pak | India v Pakistan | India vs Pakistan | Ind vs Pak

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in