தென்னாப்பிரிக்க டி20 தொடர்: இந்திய அணியின் பயிற்சியாளராக லக்‌ஷ்மன் நியமனம்?

ஆஸ்திரேலியாவுடனான பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடர் நவம்பர் 22 அன்று பெர்த்தில் தொடங்குகிறது.
தென்னாப்பிரிக்க டி20 தொடர்: இந்திய அணியின் பயிற்சியாளராக லக்‌ஷ்மன் நியமனம்?
1 min read

தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மன் நியமிக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 டர்பனில் நவம்பர் 8 அன்று நடைபெறுகிறது. அடுத்த மூன்று டி20 ஆட்டங்கள் நவம்பர் 10, நவம்பர் 13 மற்றும் நவம்பர் 15 ஆகிய நாள்களில் நடைபெறுகின்றன.

ஆஸ்திரேலியாவுடனான பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடர் நவம்பர் 22 அன்று பெர்த்தில் தொடங்குகிறது. தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழு பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியுடன் பயணிக்கவுள்ளதால், டி20 தொடருக்கு மாற்று பயிற்சியாளர் குழு நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கான இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ அதிகாரி ஒருவர் இதை கிரிக்பஸ்ஸிடம் உறுதிபடுத்தியுள்ளார்.

கடந்த 2021 முதல் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் அங்கம் வகிக்கும் விவிஎஸ் லக்‌ஷ்மன், நிறைய முறை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். முதன்முதலாக ஜூன் 2022-ல் அயர்லாந்துக்கு எதிராக தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டார். கடைசியாக ஜூன் 2024-ல் ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டார்.

தென்னாப்பிரிக்க டி20 தொடரில் சாய்ராஜ் பஹுதுலே, ரிஷிகேஷ் கனிட்கர், சுபதீப் கோஷ் ஆகியோர் விவிஎஸ் லக்‌ஷ்மன் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழுவில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in