
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எடுக்காமல் விராட் கோலி ஓய்வு பெற்றிருக்கலாம். ஆனால் சொத்து மதிப்பில் அவருடைய வளர்ச்சியும் எட்டிய மைல்கல்லும் ஆச்சர்யமூட்டுவதாகவே உள்ளது. முதலீட்டு நிறுவனமான ஸ்டாக்க்ரோ கடந்தாண்டு வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கோலியின் சொத்து மதிப்பு 1000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகத் தெரிகிறது.
பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஏ+ பிரிவில் உள்ள விராட் கோலி, இதன்மூலம், ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.
இதுதவிர சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு டெஸ்டுக்கு 15 லட்ச ரூபாயும் ஒரு ஒருநாள் ஆட்டத்துக்கு ரூ. 6 லட்சமும் ஒரு டி20க்கு 3 லட்சமும் அவர் பெற்றுள்ளார்.
தவிரவும் ஐபிஎல் போட்டியில் 2008-ல் ஆர்சிபி அணியில் இடம்பெற்று ரூ. 12 லட்சம் மட்டும் வாங்கிய கோலி, 2018 முதல் 2021 வரை வருடத்துக்கு ரூ. 17 கோடியை ஊதியமாகப் பெற்றார். தற்போது ஆர்சிபி அணியில் அவருடைய சம்பளம் - வருடத்துக்கு ரூ. 21 கோடி. ஐபிஎல்லில் மட்டும் இதுவரை ரூ. 212 கோடியளவில் சம்பாதித்துள்ளார்.
ஒப்பீட்டளவில் கிரிக்கெட் மூலமாக விராட் கோலி ஈட்டும் வருவாய் எல்லாம் ஒன்றுமே இல்லை. அதில் கிடைக்கும் புகழ், மதிப்பைக் கொண்டு விளம்பரம் மற்றும் தனது சொந்தத் தொழில் மூலமாகவே அவர் அதிக வருவாயை ஈட்டி தனது சொத்து மதிப்பை ஆயிரம் கோடி ரூபாய் வரை உயர்த்தியுள்ளார்.
குர்கானில் ரூ. 80 கோடி மதிப்புள்ள விஸ்தாரமான 10,000 சதுர அடி அளவில் மகத்தான பங்களா ஒன்று கோலிக்கு உள்ளது. மும்பை வோர்லியில் 7,000 சதுர அடியில் அரபிக் கடலை நோக்கிய ரூ. 34 கோடி மதிப்புள்ள அபார்ட்மெண்டையும் கோலி வைத்துள்ளார்.
பூமா ஒன்8 என்கிற ஆடை நிறுவனம், ராங் எனும் ஆடம்பர கிளாதிங் பிராண்ட், நியூவா எனும் ரெஸ்டாரன்ட் எனப் பல பிராண்டுகளின் உரிமையாளராகவோ அல்லது இணை உரிமையாளராகவோ கோலி உள்ளார். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தில் எஃப்சி கோவா அணியின் இணை உரிமையாளராகவும் அவர் உள்ளார். இதுதவிர நிறைய ஸ்டார்ட் அப்களைக் கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
டைம்ஸ் நவ் ஊடகத்தில் உள்ள தகவலின்படி 30 நிறுவனங்களின் விளம்பரங்களில் கோலி இடம்பெற்றுள்ளார். எம்ஆர்எஃப் டயர்ஸ் நிறுவனம் மூலமாக 8 வருட ஸ்பான்சர்ஷிப் வழியாக ரூ. 100 கோடி வரை அவருக்குக் கிடைத்துள்ளது. அதே 8 வருட ஒப்பந்தத்தின் மூலமாக புமா நிறுவனம் மூலமாக ரூ. 110 கோடியும் ஆடி இந்தியா மூலமாக 5 கோடி ரூபாயும் வருவாய் ஈட்டியுள்ளார் கோலி. மேலும் பெப்சி, நெஸ்லே, ரீபோக், கோல்கேட் என்கிற பல நிறுவனங்களின் விளம்பரங்களிலும் கோலி இடம்பெற்று வருகிறார். விளம்பரங்கள் மூலமாக நூற்றுக்கணக்கான கோடிகளை அவர் வருவாயாக ஈட்டியுள்ளதாக ஸ்டாக் குரோவும் ஃபோர்ப்ஸ் இந்தியாவும் தகவல் தெரிவித்துள்ளன.
கோலியைப் போலவே அனுஷ்காவும் பட வாய்ப்புகள், தயாரிப்பு நிறுவனம், விளம்பரங்கள் மூலமாக ரூ. 255 கோடி வருவாய் ஈட்டியுள்ளார்.
கோலிக்கு இன்னொரு பக்கமும் உண்டு. 2013-ல் விராட் கோலி அறக்கட்டளையைத் தொடங்கிய கோலி அதன்மூலமாக பல விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி செய்துவருகிறார். தவிரவும் கல்வி, மருத்துவத் துறைகளிலும் பல உதவிகளை செய்து வருகிறார்.