
ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக விராட் கோலி மௌனம் கலைத்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த ஜூன் மாதம் ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஜூன் 4 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் பங்கேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் வெளியே கூடியதால், கடுமையான கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தார்கள், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். வெற்றிக் கொண்டாட்ட விழா ஏற்பாடுகளை நிர்வகித்த டிஎன்ஏ (DNA) நிறுவனம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசியாக ஜூன் 5 அன்று இன்ஸ்டகிராம் பக்கத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டது. துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த 11 பேருடைய குடும்பத்தினருக்கும் தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்தது. மேலும், காயமடைந்த ரசிகர்களுக்கு உதவும் வகையில் ஆர்சிபி கேர்ஸ் எனும் நிதி சார்ந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஆர்சிபி அறிவித்தது.
ஜூன் 5-க்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவுகள் எதுவும் இல்லை. இந்த மௌனத்தைக் கலைக்கும் விதமாக ஆகஸ்ட் 28 அன்று இன்ஸ்டகிராமில், "கொண்டாட வரவில்லை, அக்கறையுடன் வந்துள்ளோம்" என ஆர்சிபி கேர்ஸ் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது ஆர்சிபி நிர்வாகம். கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஆர்சிபி நிர்வாகம் கடந்த ஆகஸ்ட் 30 அன்று அறிவித்தது.
இந்நிலையில், ஆர்சிபியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த விவகாரம் தொடர்பாக மௌனம் கலைத்துள்ளார்.
"வாழ்க்கையில் எதுவுமே ஜூன் 4 அன்று நிகழ்ந்த துயரத்துக்கு நம்மைத் தயார்படுத்தாது. ஆர்சிபி வரலாற்றிலேயே மகிழ்ச்சிகரமான தருணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அது துயரச் சம்பவமாக மாறிவிட்டது.
உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த ரசிகர்களை எண்ணி அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்து வருகிறேன். உங்களுடைய இழப்பு தற்போது எங்களுடைய கதையின் ஓர் அங்கமாகிவிட்டது. அக்கறை, மரியாதை மற்றும் பொறுப்புடன் ஒன்றிணைந்து முன்னோக்கி நகர்வோம்" என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளதாவது:
"ஆர்சிபி அணிக்காக எப்போது விளையாடச் சென்றாலும் மிகுந்த பேரார்வத்துடனே விளையாடச் செல்வேன். இந்தப் போரார்வம் உங்களிடமிருந்து வந்தது தான். உங்களுடைய அன்பு, நம்பிக்கை மற்றும் போராதரவிலிருந்து வந்தது.
நீங்கள் எப்போதுமே எங்களுடன் துணை நின்றுள்ளீர்கள். நாங்கள் உங்களுடன் துணை நிற்கிறோம் என்பதை மனதின் ஆழத்திலிருந்து தெரிவிக்கிரேன். என் சிந்தனை மற்றும் பிரார்த்தனைகளில் நீங்கள் இருந்துள்ளீர்கள். அனைவரும் கைக்கோர்த்து நம் வலிமையை மீண்டும் கண்டறிவோம்" என்று படிதார் குறிப்பிட்டுள்ளார்.
Royal Challengers Bengaluru | Virat Kohli | RCB | RCB Cares | IPL |IPL 2025 | IPL 2026 | RCB Fan | Rajat Patidar