கான்பூர் டெஸ்டில் புதிய உலக சாதனை படைப்பாரா கோலி?

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்காரா, ரிக்கி பாண்டிங் ஆகிய 3 பேர் மட்டுமே 27 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்கள்.
கான்பூர் டெஸ்டில் புதிய உலக சாதனை படைப்பாரா கோலி?
1 min read

கான்பூர் டெஸ்டில் குறைந்த இன்னிங்ஸில் 27 ஆயிரம் சர்வதேச ரன்கள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையைப் படைப்பதற்கான வாய்ப்பு விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தியா, வங்கதேசம் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கான்பூரில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்டில் புதிய சாதனைகளைப் படைப்பதற்கான வாய்ப்பு விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ளது. இதில் இவர் 35 ரன்கள் அடித்தால், 27 ஆயிரம் சர்வதேச ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார்.

கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸில் 27 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் கோலி பெறவுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 623-வது இன்னிங்ஸில் தான் 27 ஆயிரம் சர்வதேச ரன்களை எட்டினார். கோலி தற்போது 593 இன்னிங்ஸில் 26,965 சர்வதேச ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்காரா, ரிக்கி பாண்டிங் ஆகிய 3 பேர் மட்டுமே 27 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்கள்.

மேற்கொண்டு கான்பூர் டெஸ்டில் 7 பவுண்டரிகள் அடித்தால், டெஸ்டில் 1000 பவுண்டரிகள் என்ற மைல்கல்லையும் கோலி எட்டுவார்.

பேட்டிங்கில் இந்தச் சாதனைகளென்றால், பீல்டிங்கிலும் சச்சின் டெண்டுல்கரை முந்துவதற்கான வாய்ப்பு விராட் கோலிக்கு உள்ளது. டெஸ்டில் கோலி இதுவரை 113 கேட்சுகளை பிடித்துள்ளார். மேலும், மூன்று கேட்சுகளை பிடித்தால், 115 கேட்சுகளை பிடித்துள்ள சச்சினை, கோலி பின்னுக்குத் தள்ளுவார்.

சென்னை டெஸ்ட் கோலிக்கு சிறப்பானதாக அமையாதபோதிலும், உள்நாட்டில் மட்டும் 12 ஆயிரம் சர்வதேச ரன்கள் என்ற மைல்கல்லை அவர் அடைந்தார். சச்சினுக்கு அடுத்தபடியாக இந்த மைல்கல்லை எட்டும் இரண்டாவது இந்திய வீரர் விராட் கோலி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in