டெஸ்டிலிருந்து ஓய்வு பெற கோலி விருப்பம்
ANI

டெஸ்டிலிருந்து ஓய்வு பெற கோலி விருப்பம்

முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டதாகத் தகவல்.
Published on

இந்திய வீரர் விராட் கோலி டெஸ்டிலிருந்து ஓய்வு பெற பிசிசிஐயிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிஜிடி தொடரில் விளையாடியது. இதில் 1-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. பிஜிடி தொடரை இழந்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இந்தியா முதன்முறையாக இழந்தது. இந்திய பேட்டர்கள் மோசமான ஃபார்மில் இருந்தார்கள். விராட் கோலி பெர்த் டெஸ்டில் மட்டுமே சதமடித்தார். ரோஹித் சர்மாவின் ஃபார்மும் கவலைக்குரிய வகையில் இருந்ததால், சிட்னி டெஸ்டிலிருந்து அவர் விலகிக் கொண்டார்.

இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி அடுத்து தேர்வு செய்யப்படவுள்ளது. பிஜிடி தொடருக்கு நடுவே ஆர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரோஹித் சர்மா கடந்த 7 அன்று டெஸ்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ரோஹித் சர்மா ஓய்வைத் தொடர்ந்து புதிய கேப்டனை தேர்வு செய்ய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. ஷுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. அஸ்வின், ரோஹித் ஓய்வைத் தொடர்ந்து மூத்த வீரர்களாக விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, முஹமது ஷமி ஆகியோர் மட்டுமே உள்ளார்கள்.

இந்நிலையில் டெஸ்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து விராட் கோலி பிசிசிஐயிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், கோலி தனது முடிவைத் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோலியிடம் பிசிசிஐ கேட்டுக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்டில் விராட் கோலியின் ஃபார்மும் அண்மைக் காலமாக மோசமாகவே உள்ளது. டெஸ்டில் 30 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி 2020-க்கு பிறகு 3 சதங்களை மட்டும் அடித்துள்ளார்.

டெஸ்டில் விராட் கோலியின் பேட்டிங் சராசரி

2020

  • ரன்கள் - 116

  • சராசரி - 19.33

2021

  • ரன்கள் - 536

  • சராசரி - 28.21

2022

  • ரன்கள் - 265

  • சராசரி - 26.50

2023

  • ரன்கள் - 671

  • சராசரி - 55.91

2024

  • ரன்கள் - 417

  • சராசரி - 24.52

2025

  • ரன்கள் - 23

  • சராசரி - 11.50

டெஸ்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை அவர் திரும்பப் பெறாத பட்சத்தில் 123 டெஸ்டுகளில் 30 சதங்களுடன் 46.85 சராசரியில் 9,230 ரன்களுடன் ஓய்வு பெறுவார் விராட் கோலி.

logo
Kizhakku News
kizhakkunews.in