

இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 15 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் களமிறங்குகிறார்.
37 வயதான விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20யில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்திய வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவது கட்டாயம் என பிசிசிஐ ஏற்கெனவே முடிவு செய்து அறிவித்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வரும் கோலி, விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி இருந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் சதமடித்த கோலி, போட்டிக்கு நிறைய தயாராக வேண்டும் என்பதில் தனக்குப் பெரிய நம்பிக்கை இல்லை என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார். விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் கோலி பங்கேற்பாரா என்ற சந்தேகம் சமூக ஊடகங்களில் பேசுபொருளானது.
இந்நிலையில், விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் விராட் கோலி தில்லிக்காக விளையாடுவார் என்பதை தில்லி கிரிக்கெட் சங்கச் செயலர் அசோக் சர்மா ஈஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோவிடம் தெரிவித்துள்ளார்.
அசோக் சர்மா கூறுகையில், "நிச்சயமாக சில ஆட்டங்களில் அவர் விளையாடுவார். போட்டி முழுக்க பங்கேற்பாரா என்பது உறுதியாகத் தெரியாது. இந்திய அணியின் ஆட்டங்களைப் பொறுத்து சில ஆட்டங்களில் அவர் விளையாடுவார்" என்றார் அவர்.
தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்குப் பிறகு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுகிறது இந்தியா. இந்தத் தொடர் ஜனவரி இரண்டாவது வாரத்தில் தொடங்குகிறது.
இதற்கு முன்னதாக, விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் 7 லீக் ஆட்டங்களில் தில்லி விளையாடுகிறது. இந்த ஆட்டங்கள் அனைத்தும் பெங்களூருவில் நடைபெறுகிறது.
தில்லிக்காக கடைசியாக செப்டம்பர் 2013-ல் 50 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடினார். விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் கடைசியாக 2009-10-ல் விளையாடினார் கோலி. இவ்விரு போட்டிகளிலும் இவரே தில்லி அணியை வழிநடத்தினார்.
Virat Kohli to play in Vijay Hazare, confirms DDCA Secretary
Virat Kohli | Vijay Hazare | Delhi | DDCA |