
இந்திய வீரர் விராட் கோலி டெஸ்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான தொப்பியை முதன்முதலாக அணிந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. டெஸ்ட் கிரிக்கெட் என்னை சோதித்தது. என்னை வடிவமைத்தது. வாழ்க்கை முழுவதற்கும் நான் எடுத்துச் செல்லும் பாடங்களைக் கற்றுக்கொடுத்தது.
வெள்ளை நிற சீருடையில் விளையாடுவது தனிப்பட்ட முறையில் ஆழமானது. நீண்ட நாள்கள், அமைதியான போட்டி, யாரும் கவனத்தில் கொள்ளாத சிறிய தருணங்கள் உள்ளிட்டவையெல்லாம் என்றும் நினைவில் இருக்கும்.
டெஸ்டிலிருந்து விடைபெறுவது என்பது எளிதல்ல. ஆனால், இது தான் சரியான முடிவு எனத் தோன்றுகிறது. நான் அனைத்தையும் கொடுத்துள்ளேன். இதுவும் எனக்காக நான் எதிர்பார்த்ததைத் தாண்டி நிறைய கொடுத்துள்ளது. விளையாட்டுக்காகவும், களத்தில் என்னுடன் விளையாடியவர்கள் உள்ளிட்ட அனைவருக்காகவும் இதயம் நிறைந்த நன்றியுணர்வுடன் கடந்து செல்கிறேன்.
என் டெஸ்ட் வாழ்க்கையை எப்போதும் புன்னகையுடனே திரும்பிப் பார்ப்பேன்" என்று விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிஜிடி தொடரில் விளையாடியது. இதில் 1-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது இந்தியா. பிஜிடி தொடரை இழந்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இந்திய அணி முதன்முறையாக இழந்தது. பிஜிடி தொடருக்கு மத்தியில் ஆர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மோசமான ஃபார்மில் இருந்ததால் சிட்னி டெஸ்டிலிருந்து விலகிக் கொண்டார். மோசமான ஃபார்ம் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்று வாய்ப்பை இந்தியா இழந்தது ரோஹித் சர்மாவின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணித் தேர்வு விரைவில் நடைபெறவுள்ள நிலையில், டெஸ்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா கடந்த 7 அன்று அறிவித்தார்.
அஸ்வின், ரோஹித் சர்மா வரிசையில் விராட் கோலியும் ஓய்வு முடிவை வெளியிட்டுள்ளார். விராட் கோலியைப் பொறுத்தவரை அவர் ஏற்கெனவே ஓய்வு பெற விருப்பம் தெரிவித்ததாகவும், இந்த முடிவைப் பரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், டெஸ்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை விராட் கோலி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
2024-ல் டி20 உலகக் கோப்பையை வென்றவுடன் சர்வதேச டி20யில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றார்.
டெஸ்ட் - 123
சதம் - 30
அரைசதம் - 31
சராசரி - 46.85
அதிகபட்சம் - 254*
ரன்கள் - 9,230
டெஸ்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் காவஸ்கர் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார் கோலி.
டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர்கள்
சச்சின் டெண்டுல்கர் - 15,921 ரன்கள்
ராகுல் டிராவிட் - 13,265 ரன்கள்
சுனில் காவஸ்கர் - 10,122 ரன்கள்
விராட் கோலி - 9,230 ரன்கள்
டெஸ்டில் தலைசிறந்த வீரராக மட்டுமில்லாமல் தலைசிறந்த கேப்டனாகவும் காலத்துக்கும் திகழ்வார் விராட் கோலி.
கோலி தலைமையில் இந்தியா
டெஸ்ட் - 68
வெற்றி - 40
தோல்வி - 17
டிரா - 11
டெஸ்டில் இந்திய அணியை அதிக முறை வழிநடத்திய கேப்டனும் விராட் கோலி. இந்தியாவுக்கு அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்த கேப்டனும் விராட் கோலி.