கோலியின் பேட்டிங் குறித்து கவலை வேண்டாம்: பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர்

கோலி இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி 5 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
விக்ரம் ராத்தோர்
விக்ரம் ராத்தோர்

விராட் கோலி வழக்கம்போல் சிறப்பாக விளையாடி வருவதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆஸ்திரேலியா, இந்தியா, மே.இ. தீவுகள், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்திய அணி லீக் சுற்றில் ஒரு தோல்வியும் இன்றி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் பேட்டிங் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை அவர் விளையாடிய ஆட்டங்களில் 1, 4 மற்றும் 0 ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். கோலி தொடக்க வீரராக களமிறங்கியதே இதற்கு காரணம் என்றும், மீண்டும் அவர் 3-ம் வரிசையிலேயே விளையாட வேண்டும் என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோலியின் பேட்டிங்கைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

“எப்போது நான் வந்தாலும் விராட் கோலி குறித்து கேள்விகள் கேட்கப்படுகிறது. அவரது பேட்டிங்கை பற்றி கவலைப்பட வேண்டாம். விராட் கோலி வழக்கம்போல் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இருமுறை தவறாக ஆட்டமிழந்ததால் எதுவும் மாறப் போவதில்லை. என்னை பொறுத்தவரை கோலி இதுபோன்ற ஒரு சூழலில் இருப்பது நல்லதுதான். அதிக ரன்களை அடிக்க வேண்டும் என்ற பசியுடன் இருக்கிறார். எனவே இனி அவரிடமிருந்து சிறப்பான ஆட்டத்தைப் பார்க்கலாம்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in