ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் அற்புதமான கூட்டணியால் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் சிட்னியில் இன்று நடைபெற்றது. ஷுப்மன் கில் இம்முறையும் டாஸில் தோற்றார். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாகத் தோற்கும் 18-வது டாஸ் இது.
டாஸ் வென்ற மிட்செல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் சேவியர் பார்ட்லெட் பதிலாக நேதன் எல்லிஸ் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோருக்குப் பதிலாக குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டார்கள்.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியை 236 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா. சிட்னி ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளமாக சற்று தென்பட்டதால் 237 ரன்கள் என்ற வெற்றி இலக்கை அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் களமிறங்கினார்கள்.
மிட்செல் ஸ்டார்க் வீசிய ஓவர்களில் ரோஹித் சர்மா குறைந்தபட்சம் ஒரு பவுண்டரியையாவது அடித்து மிடுக்கான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஹேசில்வுட் மறுமுனையில் வழக்கம்போல் நல்ல லெங்தில் பந்து வீசி பேட்டர்களை சோதித்துக் கொண்டிருந்தார். முதல் பவர்பிளேயில் நேதன் எல்லிஸ், கூப்பர் கான்லி என பந்துவீச்சை மாற்றியும் மார்ஷுக்குப் பலனளிக்கவில்லை. இருவரும் பேட்டிங்கில் ஆதிக்கத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் எடுத்தது இந்தியா.
ஹேசில்வுட் வீசிய 11-வது ஓவரில் ஷுப்மன் கில் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடந்த ஆட்டத்தில் கிடைக்காத பரிசு (விக்கெட்) ஹேசில்வுட்டுக்கு இம்முறை கிடைத்தது. கடந்த இரு ஒருநாள் ஆட்டங்களிலும் டக் அவுட் ஆன விராட் கோலி, இந்த ஆட்டத்தில் முதல் பந்திலேயே 1 ரன் எடுத்து, ரன் கணக்கைத் தொடங்கிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மூத்த வீரர்களான ரோஹித் மற்றும் கோலியை அணியில் தொடர்ச்சியாக வைத்திருக்கலாமா அல்லது இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கலாமா என்ற கேள்விகளும் விமர்சனங்களும் கடந்த சில நாள்களாக ஒலித்து வருகின்றன. இந்த விமர்சனங்கள் எதற்கும் இடமளிக்காத வகையில், எல்லோரது வாயையும் அடைக்கும் வகையில் தங்களுடைய அனுபவத்தை வெளிப்படுத்தி இருவரும் கூட்டணியைக் கட்டமைத்தார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் இலக்கை அடையும்போது கூட்டணியை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதற்கான பாடத்தை இருவரும் எடுத்தார்கள்.
தேவையான நேரங்களில் பவுண்டரி அடித்து, ஸ்டிரைக்கை மாற்றிக் கொண்டு ஆட்டத்தைத் தங்களுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார்கள். ரோஹித் சர்மா 63 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஆஸ்திரேலியாவின் துருப்புச் சீட்டான ஸாம்பா சுழலில் அவர் அவ்வப்போது சிக்ஸர் அடித்து, அவரது ஆட்டத்தைக் குலைத்தார். இதனால், எந்தவோர் இடத்திலும் ஆஸ்திரேலியாவால் ஆட்டத்துக்குள் நுழைய முடியவில்லை.
மறுமுனையில் பெரிய சிக்ஸர்கள் அடிக்காதபோதும், சீரான வேகத்தில் விளையாடி வந்த விராட் கோலி 56 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார். பழைய ரோஹித், கோலியைப் பார்த்ததுபோல இருந்தது. வெற்றிக்குத் தேவையான ரன்ரேட் குறைவாக இருந்ததால், ஆட்டம் ஒருபக்கமாக மாறியது.
இருவரும் வெற்றி இலக்கை அடையும் வரை விக்கெட்டை இழக்காமல் விமர்சன வாய்களை அடைப்பார்களா என்பது மட்டும் தான் கேள்வியாக இருந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் குமார் சங்கக்காராவை முந்தினார் கோலி. ரோஹித் சர்மாவும் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 33-வது சதத்தை அடித்தார். ரோஹித் சதத்தை கோலி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். 33 ஓவர்களிலேயே இந்திய அணி 200 ரன்களை தொட்டுவிட்டது.
ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் இருவரும் கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்கள். 38.3 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 237 ரன்கள் எடுத்த இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 125 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் உள்பட 121 ரன்கள் எடுத்தார். கோலி 81 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்பட 74 ரன்கள் எடுத்தார். ரோஹித் - கோலி இணை 170 பந்துகளில் 168 ரன்கள் சேர்த்தது.
இந்த வெற்றியின் மூலம், தொடரை முழுமையாக இழக்காமல் இந்தியா தப்பித்தது. மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என வென்றுள்ளது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ரோஹித் சர்மா வென்றார்.
முன்னதாக, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியாவுக்குத் தொடக்கம் நல்லதாக அமைந்தாலும், டிராவிஸ் ஹெட்டிடம் இருந்து இம்முறையும் பெரிய இன்னிங்ஸ் கிடைக்கவில்லை. 25 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த ஹெட், சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அக்ஷர் படேல் சுழலில் மிட்செல் மார்ஷ் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கடந்த ஆட்டத்தில் அரை சதம் அடித்த மேத்யூ ஷார்ட் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் மேட் ரென்ஷா சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி கூட்டணியைக் கட்டமைத்தார். அலெக்ஸ் கேரி இதற்கு ஒத்துழைப்பு தந்தார். 33 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா நல்ல நிலையை அடைந்தது. ஆனால், இந்த அடித்தளத்தைக் கொண்டு எந்தப் பலனையும் ஆஸ்திரேலியா அனுபவித்திராத வகையில் அந்த அணியின் நடுவரிசை பேட்டிங்கை இந்தியப் பந்துவீச்சாளர்கள் திணறடித்தார்கள். அலெக்ஸ் கேரி (24) மற்றும் மிட்செல் ஓவனை ஹர்ஷித் ராணா வீழ்த்தினார். மிட்செல் ஸ்டார்கை குல்தீப் யாதவ் வீழ்த்தினார். விளைவாக 201 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஆஸ்திரேலியா.
நேதன் எல்லிஸ் 3 பவுண்டரிகளை அடித்தாலும் பிரசித் கிருஷ்ணா பந்தில் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கூப்பர் கான்லி தாக்குப்பிடித்து நின்றாலும் 23 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களுக்கு முழுமையாக பேட் செய்யாமல் 46.4 ஓவர்களில் 236 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் ஹர்ஷித் ராணா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
India's star batting duo of Rohit Sharma and Virat Kohli concluded what could be their last tour to Australia with memorable knocks and an unbeaten 168 run partnership during their side's win over Australia in third Sydney ODI to prevent a series whitewash.
Sydney ODI | IND v AUS | India v Australia | Rohit Sharma | Virat Kohli | Ro-Ko | RoKo | ODI Series |