உணவு, தண்ணீர் இல்லாமல், ரத்தம் எடுத்தும்..: வீணாகிப்போன வினேஷ் போகாட் முயற்சிகள்!

இத்தனை உழைப்பைப் போட்ட பிறகும், எதிர்பார்த்த அளவுக்கு எடை குறையாததால், வினேஷ் போகாட்டின் தலைமுடி வெட்டப்பட்டன. உடல்நரம்பிலுள்ள ரத்தத்தை..
உணவு, தண்ணீர் இல்லாமல், ரத்தம் எடுத்தும்..: வீணாகிப்போன வினேஷ் போகாட் முயற்சிகள்!
1 min read

உடல் எடையைக் குறைப்பதற்காக இரவு முழுக்க உணவு, தண்ணீர் எடுத்துக்கொள்ளாமல் கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டபோதிலும் 100 கிராம் எடை வினேஷ் போகாட்டுக்கு எதிரியாக மாறியுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் இன்று காலை தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அனுமதிக்கப்பட்ட 50 கிலோ எடையைக் காட்டிலும் 100 கிராம் கூடுதலாக இருந்ததால், வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை காலிறுதிக்கு முந்தையச் சுற்று, காலிறுதிச் சுற்று மற்றும் அரையிறுதிச் சுற்றில் அடுத்தடுத்து விளையாடி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார் வினேஷ் போகாட். செவ்வாய்க்கிழமை காலை 49.90 கிலோவாக இருந்த வினேஷ் போகாட்டின் எடை அரையிறுதி ஆட்டத்துக்குப் பிறகு 52.7 கிலோவாக இருந்தது.

வினேஷ் போகாட்டின் இயல்பான உடல் எடை 57 கிலோ. இதை 50-க்கும் கீழ் குறைக்க, இவர் கடுமையாக உழைத்தார்.

இன்று காலை எடைப் பரிசோதனை நடைபெறவிருந்த நிலையில், வினேஷ் போகாட் நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட எடையைக் காட்டிலும் 2.7 கிலோ கூடுதலாக இருந்துள்ளார். இந்தக் கூடுதல் எடையைக் குறைப்பதற்காக வினேஷ் போகாட், இவருடையப் பயிற்சியாளர் மற்றும் அணியினர் அனைவரும் இரவு முழுக்கக் கடுமையாக முயற்சித்துள்ளார்கள். வினேஷ் போகாட் எதுவும் சாப்பிடாமல், தண்ணீர்கூட குடிக்காமல் உடற்பயிற்சிகளைக் கடுமையாக மேற்கொண்டிருக்கிறார்.

இத்தனை உழைப்பைப் போட்ட பிறகும், எதிர்பார்த்த அளவுக்கு எடை குறையாததால், வினேஷ் போகாட்டின் தலைமுடி வெட்டப்பட்டன. உடல்நரம்பிலுள்ள ரத்தத்தைக் குறைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், துரதிருஷ்டவசமாக இதுவும் பலனளிக்கவில்லை. உள்நாட்டு நேரப்படி இன்று காலை 7.15 மணிக்கு எடைப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 50.1 கிலோ எடை இருந்துள்ளார் வினேஷ் போகாட். 100 கிராம் கூடுதலாக இருந்ததால், வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் எடையைக் குறைப்பதற்கான போதிய அவகாசம் வினேஷ் போகாட்டிடம் இல்லை.

இறுதிச் சுற்று வரை முன்னேறி, குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தபோதிலும் கடைசி நேரத்தில் எந்தப் பதக்கமும் இல்லாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடுமையான உழைப்பால் வினேஷ் போகாட்டுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in