
வினேஷ் போகாட் மற்றும் பஜ்ரங் புனியாவின் செயலால் தங்களின் போராட்டம் பாதிக்கப்பட்டதாக சாக்ஷி மாலிக் தெரிவித்த கருத்தை ஹரியாணா சட்டமன்ற உறுப்பினர் வினேஷ் போகாட் மறுத்துள்ளார்.
இந்திய மல்யுத்த முன்னாள் வீராங்கனை சாக்ஷி மாலிக், ‘விட்னஸ்’ என்ற தனது சுயசரிதையில், “ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தகுதிச் சுற்றில் பங்கேற்பதில் இருந்து வினேஷ் போகாட், பஜ்ரங் புனியா ஆகியோர் விலக்கு பெற்றதால் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார் குறித்த போராட்டம் பாதிக்கப்பட்டது என குறிப்பிட்டிருந்தார். மேலும், பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகாட்டுக்கு நெருக்கமாக இருந்தவர்களின் பேராசையும் இதற்கு ஒரு காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வினேஷ் போகாட், “சாக்ஷி மாலிக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நானும், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரும் உயிருடன் இருக்கும்வரை, இந்த போராட்டம் பலவீனம் அடையாது.
வெற்றி பெற விரும்புபவர்கள், பலம் குறைந்தவர்களாக இருக்கக் கூடாது. அவர்கள், எப்போதும் கடினமானத் தடைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். நாங்கள் போராட்டத்துக்கு தயாராக உள்ளோம்” என்றார்.
முன்னதாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.