பி.டி. உஷா தன்னை மருத்துவமனையில் சந்தித்தபோது எதுவும் பேசவில்லை என வினேஷ் போகாட் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து விளையாட்டுத் துறைக்கான நடுவர் மன்றத்திடம், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கக்கோரி வினேஷ் போகாட் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக வினேஷ் போகாட் கடுமையான பயிற்சியில் ஈடுபட்ட நிலையில், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷா வினேஷ் போகாட்டை மருத்துவமனையில் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. மேலும், இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பி.டி. உஷா, “போகாட்டை நேரில் சந்தித்து அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று உறுதி அளித்தேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் வினேஷ் போகாட் அளித்த ஒரு பேட்டியில், “எனக்கு பாரிஸில் எந்தளவுக்கு ஆதரவு கிடைத்தது என தெரியவில்லை. பி.டி. உஷா என்னை மருத்துவமனையில் சந்தித்தார். சமூக வலைத்தளங்களில் பதிவிட என்னுடன் என் அனுமதியின்றி ஒரு புகைப்படம் எடுத்து கொண்டார். ஆனால், என்னிடம் எதுவும் பேசவில்லை. அரசியலில் நமக்கு பின்னால் சில விஷயங்கள் நடப்பது போல், பாரிஸிலும் சில அரசியல் நடந்தது. அதனால் தான் நான் மனமுடைந்தேன். மல்யுத்தத்தை விட்டு விலக வேண்டும் என பலரும் சொன்னார்கள். நான் ஏன் மல்யுத்தத்தைத் தொடர வேண்டும். எல்லா இடங்களிலும் அரசியல் உண்டு. வெளியுலகில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் மருத்துவமனையில் இருந்தபோது, ஆதரவு தெரிவிப்பது போல் என்னுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். ஆதரவைத் தெரிவிக்க இது சரியான வழி கிடையாது”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.