வினேஷ் போகாட் மேல்முறையீட்டு மனு: ஆகஸ்ட் 13-ல் தீர்ப்பு

வினேஷ் போகாட் மேல்முறையீட்டு மனு: ஆகஸ்ட் 13-ல் தீர்ப்பு

வினேஷ் போகாட் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஹரீஷ் சால்வே மற்றும் விதுஷ்த் சிங்கானியா ஆகியோர் ஆஜராகிறார்கள்.
Published on

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் மகளிர் மல்யுத்தம் போட்டியில் தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி வினேஷ் போகாட் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஆகஸ்ட் 13-ல் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

வினேஷ் போகாட் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதால், குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்திருந்த நிலையில், எந்தப் பதக்கமும் இல்லாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், ஒட்டுமொத்த நாடும் ஏமாற்றமடைந்தது.

விளையாட்டுத் துறைக்கான நடுவர் மன்றத்திடம், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கக்கோரி வினேஷ் போகாட் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் நிறைவடைவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என முன்பு தெரிவிக்கப்பட்டது. பிறகு, இன்றிரவு 9.30 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வினேஷ் போகாட் மனு மீதான தீர்ப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்கக் கோரியும், சில கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கோரியும் நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது. பதில்கள் மற்றும் இறுதி வாதங்கள் அடிப்படையில் ஆகஸ்ட் 13-ல் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த வழக்கில் வினேஷ் போகாட் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஹரீஷ் சால்வே மற்றும் விதுஷ்த் சிங்கானியா ஆகியோர் ஆஜராகிறார்கள். பாரிஸ் ஒலிம்பிக்ஸ் நாளையுடன் நிறைவடைகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in