
ஒருவேளை பதக்கம் கிடைக்காவிட்டாலும் வினேஷ் போகாட் ஒரு சாம்பியன் தான் என்று வினேஷ் போகாட்டின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் மகளிர் மல்யுத்தம் போட்டியில் தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி வினேஷ் போகாட் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு ஆகஸ்ட் 13-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து விளையாட்டுத் துறைக்கான நடுவர் மன்றத்திடம், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கக்கோரி வினேஷ் போகாட் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் நிறைவடைவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என முன்பு தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 10 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வினேஷ் போகாட் மனு மீதான தீர்ப்பு மீண்டும் ஆகஸ்ட் 13-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று (ஆகஸ்ட் 13) இரவு 9.30 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தீர்ப்பு ஆகஸ்ட் 16-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து வினேஷ் போகாட் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் விதுஷ்த் சிங்கானியா விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது:
“இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம். வழக்கை மீண்டும் நீட்டித்திருப்பதால், இதுகுறித்து தீவிரமாக சிந்திப்பார்கள் என நினைக்கிறேன்.
நடுவர் இது குறித்து அதிகமாக யோசிப்பது நல்லது தான். கடந்த காலங்களில் நான் சிஏஎஸ்-ல் (CAS) பல வழக்குகளில் வாதாடி உள்ளேன். அதில் வெற்றி விகிதம் என்பது மிகக் குறைவு. எனவே இந்த வழக்கில் நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம். அது கடினம் என்றாலும் ஏதேனும் நல்லது நடக்கும் என்று நம்புகிறோம்.
நாம் அனைவரும் வினேஷுக்காக பிரார்த்தனை செய்வோம். அவருக்கு ஒரு பதக்கம் கிடைக்கும் என்று நம்புவோம். ஒருவேளை பதக்கம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவர் ஒரு சாம்பியன் தான்” என்றார்.