வினேஷ் போகாட்டின் உடல் எடை அதிகரிக்க யார் காரணம்?: பி.டி. உஷா விளக்கம்

இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு சார்பாக அமைக்கப்பட்ட இந்திய அணியின் மருத்துவக்குழு இதற்கு பொறுப்பேற்க முடியாது.
வினேஷ் போகாட்
வினேஷ் போகாட்ANI
1 min read

வீரர்களின் உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளுக்கு அந்தந்த வீரர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று பி.டி. உஷா தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் காலிறுதிக்கு முந்தையச் சுற்று, காலிறுதிச் சுற்று மற்றும் அரையிறுதிச் சுற்றில் அடுத்தடுத்து வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதன் பிறகு 50 கிலோ எடையைக் காட்டிலும் 100 கிராம் அளவில் கூடுதல் எடையில் இருந்ததால், வினேஷ் போகாட் பாரிஸ் ஒலிம்பிக்ஸிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்தக் கூடுதல் எடையைக் குறைப்பதற்காக வினேஷ் போகாட், இவருடையப் பயிற்சியாளர் மற்றும் அணியினர் அனைவரும் இறுதிச் சுற்றுக்கு முந்தைய நாள் இரவு முழுக்கக் கடுமையாக முயற்சித்தனர்.

வினேஷ் போகாட் எதுவும் சாப்பிடாமல், தண்ணீர்கூட குடிக்காமல் உடற்பயிற்சிகளைக் கடுமையாக மேற்கொண்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து உடல் எடையைக் குறைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து இந்திய அணியின் மருத்துவக்குழுவின் தலைவர் தின்ஷா பத்ரிவாலா விளக்கம் அளித்தார்.

இதனிடையே விளையாட்டுத் துறைக்கான நடுவர் மன்றத்திடம், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கக்கோரி வினேஷ் போகாட் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதற்கான தீர்ப்பு ஆகஸ்ட் 13-ல் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் வீரர்களின் உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளுக்கு அந்தந்த வீரர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷா தெரிவித்துள்ளார்.

பி.டி. உஷா குறிப்பிட்டுள்ளதாவது:

“மல்யுத்தம், குத்துச் சண்டை, பளுதூக்குதல், ஜூடோ போன்ற விளையாட்டுகளில் உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளுக்கு அந்தந்த வீரர்களும், அவர்களின் பயிற்சியாளர் குழுவும் பொறுப்பேற்க வேண்டும்.

இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு சார்பாக அமைக்கப்பட்ட இந்திய அணியின் மருத்துவக்குழுவின் தலைவர் தின்ஷா பத்ரிவாலா மற்றும் அவரது குழு இதற்கு பொறுப்பேற்க முடியாது.

வீரர்களின் காயம் போன்ற பிரச்னைகளைக் கவனித்து கொள்ள அந்த குழுவை ஒலிம்பிக்ஸ் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தேர்வு செய்தோம்.

மேலும், தனிப்பட்ட முறையில் ஊட்டச்சத்து நிபுணர், பிஸியோதெரபிஸ்ட் இல்லாத வீரர்களுக்கும் அவர்கள் உதவி செய்வார்கள்.

எனவே, அந்த குழு மீதும், குறிப்பாக தின்ஷா பத்ரிவாலா மீதும் குற்றம் சாட்டப்படுவது நியாயமில்லை” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in