உடல் எடையைக் குறைப்பதற்காக என்னென்ன முயற்சிகளை வினேஷ் போகாட் மேற்கொண்டார் என்பதை மருத்துவர் தின்ஷா பத்ரிவாலா தெரிவித்துள்ளார்.
மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் நேற்று காலிறுதிக்கு முந்தையச் சுற்று, காலிறுதிச் சுற்று மற்றும் அரையிறுதிச் சுற்றில் அடுத்தடுத்து வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில், 50 கிலோ எடையைக் காட்டிலும் 100 கிராம் அளவில் கூடுதல் எடையில் இருந்ததால், வினேஷ் போகாட் பாரிஸ் ஒலிம்பிக்ஸிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து உடல் எடையைக் குறைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார் இந்திய அணியின் மருத்துவக்குழுவின் தலைவர் தின்ஷா பத்ரிவாலா.
தின்ஷா பத்ரிவாலா பேசியதாவது
“பொதுவாக, மல்யுத்த வீரர்கள் தங்களின் இயல்பான எடையை விட குறைந்த எடைப் பிரிவில் மோதுவார்கள். எடையைக் குறைப்பதற்கு தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
மேலும், உடலிலிருந்து அதிகமான வியர்வை வெளியேற வேண்டும். அதற்கு அதிகமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யும்போது அந்த வீரர் மிகவும் சோர்வடைவார்.
அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். வழக்கமாக வினேஷ் போகாட்டுக்கு ஒரு நாளில் 1.5 கிலோ ஊட்டச்சத்து வழங்கப்படும். அவரது உடலுக்கு அதுவே போதுமானது.
ஆனால், நேற்று ஆட்டம் முடிந்தவுடன் அவரது எடை அதிகமானதாகத் தெரியவந்துள்ளது. பொதுவாக இதுபோன்ற சூழலில் எடையைக் குறைக்க என்ன செய்வோமோ அதைத்தான் நேற்றிரவும் செய்தோம்.
உடல் எடையைக் குறைப்பதற்காக இரவு முழுக்க உணவு, தண்ணீர் எடுத்துக்கொள்ளாமல் கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டபோதிலும் இன்று காலை 100 கிராம் எடை அதிகமாக இருந்தது.
இதனால், அவரது தலைமுடியை வெட்டுவது, அவரது உடையின் அளவைக் குறைப்பது என்று பல முயற்சிகளைச் செய்தும் அவரது எடையைக் குறைக்க முடியவில்லை.
உடலளவிலும், மனதளவிலும் வலிமையுடன் இருக்கும் போகாட்டுக்கு கடைசி நேரத்தில் எந்தப் பதக்கமும் இல்லாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது” என்றார்.
மேலும், இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷா, “இந்த முடிவு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. போகாட்டை நேரில் சந்தித்து அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று உறுதி அளித்தேன்.
மேலும், இந்த முடிவு குறித்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மேல்முறையீடு செய்துள்ளது. போகாட்டுக்கு தேவையான மருத்துவ உதவிகளை தின்ஷா பத்ரிவாலா தலைமையிலான இந்திய மருத்துவ அணி செய்து வருகிறது” என்றார்.