
உள்நாட்டு கிரிக்கெட் பருவம் இன்றுமுதல் தொடங்கியுள்ள நிலையில், தமிழக அணியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார் 34 வயது ஆல்-ரவுண்டர் விஜய் ஷங்கர்.
அவருடைய கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் விஜய் ஷங்கருக்குத் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. திரிபுரா அணியில் விஜய் சங்கர் இணையவுள்ளார்.
தமிழ்நாடு அணிக்காக 13 ஆண்டுகளாக விளையாடி வந்தார் விஜய் ஷங்கர். 2012 ரஞ்சி கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக அறிமுகமான விஜய் ஷங்கர், பத்ரிநாத்துக்குப் பிறகு நடுவரிசை பேட்டிங்கை வலுப்படுத்தினார்.
ரஞ்சியில் 81 இன்னிங்ஸில் 44.25 சராசரியில் 11 சதங்களுடன் 3,142 ரன்கள் எடுத்துள்ளார். மிதவேகப்பந்துவீச்சாளரான விஜய் ஷங்கர் 43 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அண்மைக் காலமாக தமிழ்நாடு அணியில் இவருக்கான வாய்ப்புகள் தொடர்ச்சியாகக் கிடைக்கவில்லை. கடந்த ரஞ்சி கோப்பை பருவத்திலும் முதலிரு ஆட்டங்களில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதேபோல சையது முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலும் பல ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை.
சென்னையில் நடைபெற்று வரும் புச்சி பாபு கிரிக்கெட் போட்டியில் மஹராஷ்டிர அணிக்கு எதிரான ஆட்டத்தில் விஜய் சங்கர் இடம்பெறவில்லை. இதையடுத்து இந்த வருடம் உள்நாட்டு கிரிக்கெட் பருவம் தொடங்குவதற்கு முன்னதாக கடைசி நிமிடத்தில் அணி மாற முடிவு செய்த விஜய் ஷங்கர், தற்போது இதற்கான தடையில்லாச் சான்றிதழைத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடமிருந்து பெற்றுள்ளார்.
இதன்மூலம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடனான 23 ஆண்டுகால உறவு முடிவுக்கு வந்ததாக விஜய் ஷங்கர் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2024-25 ரஞ்சிப் பருவத்தில் இரு சதங்களுடன் 476 ரன்கள் எடுத்தார். மேலும் 2016-17 பருவத்தில் விஜய் சங்கர் தலைமையில் விஜய் ஹசாரே, தியோதர் கோப்பைகளை தமிழக அணி வென்றது. 2021-22-ல் தமிழக அணிக்கு சையத் முஷ்டாக் அலி கோப்பையையும் அவர் வென்று கொடுத்தார்.
கடந்தாண்டு ஆகஸ்டில் மற்றொரு மூத்த வீரரான பாபா அபராஜித் கேரள அணிக்கு மாறினார்.
Tamil Nadu | Vijay Shankar | Tamil Nadu Cricket Association | TNCA | Domestic Season |