

விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பிஹார் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளது.
விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் பிஹார், அருணாச்சலப் பிரதேச அணிகள் ராஞ்சியில் மோதின. டாஸ் வென்ற பிஹார் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க பேட்டர் 14 வயது இளம் வைபவ் சூர்யவன்ஷி 84 பந்துகளில் 15 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகள் உள்பட மொத்தம் 190 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சதமடித்த இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அதேசமயம், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைவான பந்துகளில் (59) 150 ரன்களை எடுத்தவர் என்ற ஏபி டி வில்லியர்ஸ் சாதனையை (64 பந்துகளில்) முறியடித்தார்.
அடுத்து வந்த அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஆயுஷ் லோஹாருகா 56 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் உள்பட மொத்தம் 116 ரன்கள் விளாசினார்.
கடைசி நேரத்தில் பிஹார் கேப்டன் சகிபுல் கனி 40 பந்துகளில் 12 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் உள்பட 128 ரன்கள் எடுத்தார். இவர் 32 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகவேகமாக சதமடித்தவர் என்ற சாதனையை தன்வசப்படுத்தியிருந்தவர் அன்மோல்பிரீத் சிங். இவர் 35 பந்துகளில் சதமடித்திருந்தார். இந்தச் சாதனையை சகிபுல் கனி முறியடித்துள்ளார்.
இவ்வளவு அதிரடிக்குப் பிறகும் பிஹார் அணி சாதனை படைக்காமல் இருந்திருக்குமா? 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் குவித்து சாதனை படைத்தது பிஹார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் 500 ரன்கள் விளாசுவது இதுவே இரண்டாவது முறை. முன்னதாக, கடந்த 2022-ல் இதே அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிராக தமிழ்நாடு அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 506 ரன்கள் குவித்தது. இந்தச் சாதனையையும் கடந்து 574 ரன்கள் குவித்துள்ளது பிஹார்.
இதன்மூலம், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை 574 ரன்கள் குவித்த பிஹார் படைத்துள்ளது.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த அணி
பிஹார் - 574/6
தமிழ்நாடு - 506/2
இங்கிலாந்து - 498/4
| Vijay Hazare | Vijay Hazare Trophy | Bihar | Vaibhav Suryavanshi | Ayush Loharuka | Sakibul Gani | Arunachal Pradesh |