இரானி கோப்பையை 3-வது முறையாக வென்றது விதர்பா! | Irani Cup | Vidarbha |
இரானி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாகக் கோப்பையை வென்றுள்ளது விதர்பா.
ரஜத் படிதார் தலைமையிலான ரெட்ஸ் ஆஃப் இந்தியா - அக்ஷய் வாட்கர் தலைமையிலான விதர்பா இடையிலான இரானி கோப்பைப் போட்டி நாக்பூரில் கடந்த அக்டோபர் 1 அன்று தொடங்கியது. டாஸ் வென்ற விதர்பா கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி, தொடக்க பேட்டர் அதர்வா டைடேவின் சதத்தால் 143 ரன்கள் குவித்தது. ரெஸ்ட் ஆஃப் இந்தியாவில் அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் ரஜத் படிதார் மட்டுமே சதமடித்தார்கள். மற்ற பேட்டர்கள் சொதப்பியதால் 214 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ரெஸ்ட் ஆஃப் இந்தியா.
128 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய விதர்பா 232 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன்மூலம், ரெஸ்ட் ஆஃப் இந்தியாவின் வெற்றிக்கு 361 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மேல் வரிசையில் அபிமன்யு ஈஸ்வரன், இஷான் கிஷன், ரஜத் படிதார் என யாரும் கைக்கொடுக்கவில்லை. ருதுராஜ் கெயிக்வாடும் ஏமாற்றமளித்தார். இதனால், ரெஸ்ட் ஆஃப் இந்தியா 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
யஷ் துல் மற்றும் மானவ் சுதார் மட்டும் நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சதத்தை நெருங்கிய யஷ் துல் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவருடைய விக்கெட்டுக்கு பிறகு பின்வரிசை பேட்டர்களும் அடுத்தடுத்து நடையைக் கட்டினார்கள். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மானவ் சுதார் 56 ரன்கள் எடுத்தார். ரெஸ்ட் ஆஃப் இந்தியா 267 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விதர்பாவில் அதிகபட்சமாக ஹர்ஷ் துபே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விதர்பா, மூன்றாவது முறையாக இரானி கோப்பையை வென்றது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த அதர்வா டைடே ஆட்டநாயகன் விருதை வென்றார்.
விதர்பா அணி இதற்கு முன்பு 2017/18, 2018/19 ஆகிய பருவங்களில் இரானி கோப்பையை வென்றது.
Irani Cup | Irani Trophy | Vidarbha | Rest of India | Atharva Taide | Akshay Wadkar |