
வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வருவதற்கு படிப்பு அவசியம் என வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் ரூ. 23.75 கோடிக்கு கேகேஆர் அணியால் தேர்வு செய்யப்பட்ட வெங்கடேஷ் ஐயர் படிப்பின் முக்கியத்துவம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டியில் வெங்கடேஷ் ஐயர் பேசியதாவது:
“நான் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்ததால், கிரிக்கெட் மட்டுமே விளையாடுவேன் எனக் கூறி எனது பெற்றோர்களை சமாளிப்பது கடினம். நான் நன்றாக படிப்பேன். எனது பெற்றோர்கள் நான் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என விரும்பினர்.
மத்தியப் பிரதேச அணிக்கு புதிதாக எந்த ஒரு வீரர் வந்தாலும், “நீங்கள் படிக்கிறீர்களா?” என கேட்பேன். உயிர் உள்ள வரை கல்வி உங்களுடன் இருக்கும். ஆனால், கிரிக்கெட்டை 60 வயது வரை விளையாட முடியாது. வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வருவதற்கு படிப்பு அவசியம். எப்போதும் விளையாட்டை குறித்து யோசித்து கொண்டே இருந்தால், அது அழுத்தத்தை கொடுக்கும். எனவே, கல்வி எனக்கு ஒரு இடைவேளையை கொடுக்கிறது.
ஒரு கிரிக்கெட் வீரராக களத்தில் சிறந்த முடிவுகளை எடுக்கவும் எனக்கு கல்வி உதவியாக இருக்கிறது. நான் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற படித்துக்கொண்டு இருக்கிறேன். அடுத்த நேர்காணலில், டாக்டர். வெங்கடேஷ் ஐயர் ஆக இருப்பேன்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.