
சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 80 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது.
ஐபிஎல் 2025 போட்டியின் 15-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
கொல்கத்தாவுக்கு இம்முறையும் தொடக்கம் சரியாக அமையவில்லை. குயின்டன் டி காக் 1 ரன்னுக்கும் சுனில் நரைன் 7 ரன்னுக்கும் ஆட்டமிழந்தார்கள். கேப்டன் ரஹானே மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி கூட்டணியைக் கட்டமைத்தார்கள். பவர்பிளேயின் கடைசி ஓவரில் இரு சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. 6 ஓவர்களில் கேகேஆர் 53 ரன்கள் எடுத்தது. பவர்பிளே முடிந்தவுடன் சீரான வேகத்தில் இருவரும் விளையாட 10 ஓவர்களில் 84 ரன்கள் எடுத்தது கேகேஆர்.
ரகுவன்ஷி படிப்படியாக ரன் குவிக்கும் வேகத்தை அதிகரித்தார். இதே முயற்சியில் ரஹானேவும் ஈடுபட 38 ரன்களுக்கு ஸீஷன் அன்சாரி பந்தில் ஆட்டமிழந்தார். ரஹானே - ரகுவன்ஷி இணை 51 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. கேகேஆரின் இன்றைய பேட்டிங் வரிசையில் 9-வது வரிசை வரை பேட்டர்கள் இருந்தார்கள். ரகுவன்ஷி 30-வது பந்தில் அரை சதம் அடித்து 32-வது பந்தில் ஆட்டமிழந்தார்.
வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரிங்கு சிங் தொடக்கத்தில் சற்று தடுமாறினார்கள். எதிர்பார்த்த வேகத்தில் அவர்களால் ரன் குவிக்க முடியவில்லை. ஹர்ஷல் படேல் பந்தில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து ரிங்கு சிங் நல்ல நிலைக்கு வந்தார். 17 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்த கேகேஆர் அணியால், இருவரும் ஆடிய வேகத்துக்கு 180 ரன்கள் எடுப்பது சற்று சவாலானதாகத் தெரிந்தது.
18-வது ஓவரிலிருந்து வெங்கடேஷ் ஐயர் பேட்டில் பந்து மாட்டத் தொடங்கியது. 18-வது ஓவரில் 17 ரன்கள் எடுத்தது கேகேஆர். கம்மின்ஸ் வீசிய 19-வது ஓவரில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்தார் வெங்கடேஷ். 25 பந்துகளில் அரை சதம் அடித்தார். கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்த வெங்கடேஷ் அடுத்த பந்திலேயே 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கடைசி 3 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தது கேகேஆர். 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் கேகேஆர் எடுத்த ரன்கள் 78.
சன்ரைசர்ஸில் இம்பாக்ட் வீரராக டிராவிஸ் ஹெட் வந்தார். கேகேஆரில் வைபவ் அரோரா இம்பாக்ட் வீரராக வந்தார். முதல் ஓவரிலேயே இருவரும் நேருக்கு நேர் எதிர்கொள்ள நேர்ந்தது. ஹெட் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்திலேயே ஹர்ஷித் ராணாவின் அற்புதமான கேட்சில் அவர் ஆட்டமிழந்தார். ராணா வீசிய அடுத்த ஓவரில் மற்றொரு தொடக்க பேட்டர் அபிஷேக் சர்மா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரஹானேவின் சிறப்பான கேட்சால் இஷான் கிஷன் 2 ரன்களுக்கு அரோரா பந்தில் ஆட்டமிழந்தார்.
9 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சன்ரைசர்ஸில் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் கமிந்து மெண்டிஸ் கூட்டணி அமைத்தார்கள். ரஸ்ஸல் தவறவிட்ட கேட்ச் வாய்ப்பைப் பயன்படுத்தி மெண்டிஸ் சற்று தாக்குப்பிடித்தார். 6 ஓவர்களில் 33 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ்.
பவர்பிளே முடிந்தவுடன் ரஸ்ஸல் பந்தில் நிதிஷ் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். களத்தில் நேரத்தை செலவிட்டதால் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட மெண்டிஸ் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
10 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் மட்டுமே எடுத்த சன்ரைசர்ஸுக்கு கடைசி 10 ஓவர்களில் 129 ரன்கள் தேவைப்பட்டன. அனிகெட் வர்மாவும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், முழுப் பொறுப்பும் கிளாஸென் தலைமேல் விழுந்தது.
கடைசி 7 ஓவர்களில் சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 110 ரன்கள் தேவைப்பட்டன. நரைன் பந்தில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை அடித்து ஆட்டத்தில் உயிரைக் கொண்டு வர முயற்சித்தார் கிளாஸென். அடுத்த ஓவரிலேயே அரோராவை கொண்டு வந்தார் ரஹானே. விளைவு, கிளாஸென் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆட்டம் முடிந்தது. அடுத்த 8 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது சன்ரைசர்ஸ். 16.4 ஓவர்களில் 120 ரன்களுக்கு சுருண்டது சன்ரைசர்ஸ்.
சொந்த மைதானத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது கேகேஆர். 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அரோரா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
4 புள்ளிகளைப் பெற்ற கேகேஆர் புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் கடைசி இடத்துக்குச் சென்றுள்ளது.