
ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர்களான வருண் சக்ரவர்த்தியும், திலக் வர்மாவும் முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.
இங்கிலாந்துக்கு எதிரான ராஜ்கோட் டி20யில் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய வருண் சக்ரவர்த்தி, இந்த டி20 தொடரில் இதுவரை 10 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஒரு டி20 தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள பந்துவீச்சாளர்களுக்கான டி20 தரவரிசையில் 25 இடங்கள் முன்னேறி, 5-வது இடம் பிடித்து அசத்தியுள்ளார் வருண் சக்ரவர்த்தி. மற்ற இந்திய வீரர்களான அர்ஷ்தீப் சிங் 9-வது இடத்திலும் ரவி பிஸ்னாய் 10-வது இடத்திலும் உள்ளார்கள். முதலிடத்தில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் உள்ளார்.
டி20 பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் திலக் வர்மா 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.