2-வது ஒருநாள்: வாண்டெர்சே சுழலில் திணறிய இந்தியா தோல்வி!

வாண்டெர்சே 6 விக்கெட்டுகளையும், அசலங்கா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
2-வது ஒருநாள்: வாண்டெர்சே சுழலில் திணறிய இந்தியா தோல்வி!
படம்: https://x.com/OfficialSLC
2 min read

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

இலங்கை, இந்தியா இடையிலான முதல் ஆட்டம் சமனில் முடிந்த நிலையில், இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சாரித் அசலங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஹசரங்கா காயம் காரணமாக விலகியதைத் தொடர்ந்து, ஜெஃப்ரி வாண்டெர்சே சேர்க்கப்பட்டார். முகமது ஷிராஸுக்குப் பதில் கமிந்து மெண்டிஸ் சேர்க்கப்பட்டார். இந்திய அணி மாற்றம் எதுவும் இல்லாமல் விளையாடியது.

ஆட்டத்தின் முதல் பந்திலேயே பதும் நிசங்காவை டக் அவுட் செய்தார் முகமது சிராஜ். இலங்கை பேட்டர்கள் வழக்கம்போல நேரம் எடுத்துக்கொண்டு நிதானம் காட்டினார்கள். பவர்பிளேயில் அக்‌ஷர் படேல் அறிமுகம் செய்யப்பட்டார், பலனளிக்கவில்லை. 10 ஓவர்களில் இலங்கை 42 ரன்கள் எடுத்தது.

இரண்டாவது விக்கெட்டுக்கு அவிஷ்கா ஃபெர்னான்டோ - குசால் மெண்டிஸ் இணை 50 ரன்களை கடந்தது. வாஷிங்டன் சுந்தர் அறிமுகம் செய்யப்பட்டார். இவர் அவிஷ்கா ஃபெர்னான்டோவை (42) வீழ்த்தி கூட்டணியைப் பிரித்தார். தனது அடுத்த ஓவரின் முதல் பந்தில் குசால் மெண்டிஸையும் (30) வீழ்த்தினார் வாஷிங்டன் சுந்தர்.

20 ஓவர்களில் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது. சதீரா சமரவிக்ரமா, லியானகே, அசலங்கா ஆகியோர் பெரிய இன்னிங்ஸை கட்டமைக்காமல் வெளியேறினார்கள். 136 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தடுமாறியது.

துனித் வெல்லாலகே, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் கூட்டணியைக் கட்டமைத்தார்கள். 40 ஓவர்கள் முடிவில் இலங்கை 161 ரன்கள் எடுத்தது. 44-வது ஓவரிலிருந்து வெல்லாலகே அதிரடி காட்டினார். அணியின் ஸ்கோர் 46-வது ஓவரில் 200 ரன்களை தொட்டது.

47-வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே வெல்லாலகேவை வீழ்த்தினார். வெல்லாலகே 35 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். கமிந்து மெண்டிஸ் கடைசிப் பந்தில் ரன் அவுட் ஆனார். இவர் 44 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார்.

கமிந்து மெண்டிஸ், வெல்லாலகே இணை 68 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்ததால், இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது.

241 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. வழக்கத்துக்கு மாறாக இந்திய அணிக்கு தொடக்கம் அதிரடியாக அமையவில்லை. முதல் 3 ஓவர்களில் இந்திய அணி 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. சுழற்பந்துவீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைத்ததால், வெல்லாலகே இரண்டாவது ஓவரிலிருந்து வீசத் தொடங்கினார். இவர் வீசிய 4-வது ஓவரில் ரோஹித் சர்மா மூன்று பவுண்டரிகள் அடித்தார். இதன்பிறகு, சீரான இடைவெளியில் பவுண்டரிகள் வரத் தொடங்கின. ரோஹித் சர்மா சிக்ஸர்களும் அடிக்கத் தொடங்கினார். கமிந்து மெண்டிஸ் வீசிய 10-வது ஓவரில் சிக்ஸர் அடித்த ரோஹித் 29 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இந்திய அணியும் 10 ஓவர்கள் முடிவில் 66 ரன்கள் சேர்த்தது.

அரை சதம் அடித்து இன்னிங்ஸை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரோஹித் சர்மா, ஜெஃப்ரி வாண்டெர்சே அறிமுகம் செய்யப்பட்டவுடன் இவருக்கு நெருக்கடி கொடுக்க முயற்சித்தார். ஸ்விட்ச் ஹிட் ஷார்ட் விளையாட முயற்சித்து 44 பந்துகளில் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஹசரங்காவுக்குப் பதில் அணியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட இந்த வாண்டர்செவை எதிர்கொள்ள இந்திய பேட்டர்கள் திணறினார்கள். ஷுப்மன் கில் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இடக்கை, வலது கை பேட்டர்கள் கூட்டணி வேண்டும் என்பதற்காக இந்த முறை 4-வது பேட்டராக துபே களமிறக்கப்பட்டார். இவர் கில் ஆட்டமிழந்த அதே ஓவரில் வாண்டெர்சேவிடம் டக் அவுட் ஆனார்.

அடுத்த ஓவரில் கோலியையும் ஆட்டமிழக்கச் செய்தார் வாண்டெர்சே. இதற்கு அடுத்த ஓவரில் ஷ்ரேயஸும் கோலியைப்போலவே ஆட்டமிழந்தார். இந்திய அணி 133 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அனைத்து 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது வாண்டெர்சே. அக்‌ஷர் படேல் துரிதமாக விளையாடி நெருக்கடியைத் தணிக்கப் பார்த்தார். வாண்டெர்சேவின் 6-வது விக்கெட்டாக, கேஎல் ராகுல் டக் அவுட் ஆனார்.

அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர் என இரு இடக்கை பேட்டர்கள் இருந்ததால், வாண்டெர்சே நிறுத்தப்பட்டார். இந்தக் கூட்டணி நிதானமாக விளையாடியது. அக்‌ஷர் படேல் தேவையான நேரத்தில் எளிதான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பி விளையாடி வந்தார். 7-வது விக்கெட்டுக்கு 38 ரன்கள் சேர்த்த நிலையில், அக்‌ஷர் படேல் விக்கெட்டை வீழ்த்தினார் அசலங்கா. இவர் 44 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.

இவரைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தரும் அசலங்கா சுழலில் வீழ்ந்தார். சற்று தாக்குப்பிடித்து விளையாடினாலும், சிராஜால் நீடிக்க முடியவில்லை. அர்ஷ்தீப் சிங் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

42.2 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது இந்திய அணி. இலங்கை 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் வாண்டெர்சே 6 விக்கெட்டுகளையும், அசலங்கா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஆட்டம் சமனில் முடிந்ததால், தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது இலங்கை. 6 விக்கெட்டுகளை வீழ்த்திய வாண்டெர்சே ஆட்டநாயகனாகத் தேர்வானார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in