டி20 உலகக் கோப்பையின் முதல் அதிர்ச்சி: பாகிஸ்தானை வீழ்த்திய அமெரிக்கா

சூப்பர் ஓவரில் அட்டகாசமாக விளையாடிய அமெரிக்காவுக்கு வெற்றி.
டி20 உலகக் கோப்பையின் முதல் அதிர்ச்சி: பாகிஸ்தானை வீழ்த்திய அமெரிக்கா

அனைவரும் எதிர்பார்த்த முதல் அதிர்ச்சி முடிவு கிடைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் சூப்பர் ஓவர் வரை சென்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது அமெரிக்கா.

இரு அணிகளும் 159 ரன்கள் எடுத்து ஆட்டம் சமன் ஆன நிலையில் சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா, 18 ரன்கள் எடுத்தது. முஹமது அமிர், அந்த ஓவரில் மூன்று வைட்கள் வீசி சொதப்பினார். ஓவர் த்ரோக்களும் கிடைக்க சூப்பர் ஓவர் அமெரிக்காவுக்கு அற்புதமாக அமைந்தது. 18 ரன்கள் எடுத்தாலும் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தது அமெரிக்கா. பாகிஸ்தான் பேட்டிங் செய்தபோது அமெரிக்கப் பந்துவீச்சாளர் நெட்ராவால்கர் 2 வைட்கள் வீசினாலும், ஒரு பவுண்டரி மட்டுமே கொடுத்து அசத்தினார். ஒரு விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான், எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தது.

டாலஸில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற அமெரிக்கா, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பவர்பிளேயில் 30 ரன்கள் மட்டும் கொடுத்து பாகிஸ்தானின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், 43 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். 13-வது ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்திருந்த பாகிஸ்தான் கடைசிக்கட்டத்தில் நன்றாக விளையாடி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. ஷதாப் கான் 40, இஃப்திகார் 18, ஷாஹீன் அஃப்ரிடி 23 ரன்கள் எடுத்தார்கள். கெஞ்ஜி 3 விக்கெட்டுகளையும் நெட்ராவால்கர் 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.

இலக்கை விரட்டியபோதும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளித்தது அமெரிக்கா. தொடக்க வீரரும் கேப்டனுமான மொனாக் படேல் 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். கோஸ் 26 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து இலக்கை நெருங்க உதவினார். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. ஹாரிஸ் ராஃப் முதல் மூன்று பந்துகளை நன்றாக வீசி, 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஆனால் 4-வது பந்தில் அவர் ஃபுல்டாஸ் வீச, அதில் சிக்ஸர் அடித்தார். இதனால் ஆட்டம் மிகவும் பரபரப்பானது. கடைசிப் பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டபோது நிதிஷ் குமார் பவுண்டரி அடித்து ஆட்டத்தைச் சமன் செய்து சூப்பர் ஓவருக்கு வழி வகுத்தார்.

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுபோல பல அதிர்ச்சி முடிவுகள் கிடைத்துள்ளன. இந்த வெற்றி அமெரிக்க கிரிக்கெட்டுக்குப் பெரிய திருப்புமுனையாகவும் அமையலாம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in