அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்த ஸ்பெயின் நட்சத்திர வீரர் கார்லஸ் அல்காரஸ் போட்டியிலிருந்து வெளியேறினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் உலகின் மூன்றாம் நிலை வீரரான கார்லஸ் அல்காரஸ், 74-வது நிலையிலுள்ள நெதர்லாந்து வீரர் போடிக் வான் டே ஸாண்ட்ஸகல்பை எதிர்கொண்டார்.
இதில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்காரஸ் 1-6, 5-7, 4-6 என்கிற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதன்மூலம், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தொடர்ந்து 15 வெற்றிகளைப் பெற்று வந்த அல்காரஸின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ஜூனில் பிரெஞ்சு ஓபன், ஜூலையில் விம்பிள்டன் பட்டங்களை வென்ற அல்காரஸ் ஆகஸ்ட் தொடக்கத்தில் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். பாரிஸ் ஒலிம்பிக்ஸ் இறுதிச் சுற்றில் நோவக் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் கடைசியாக விளையாடிய மூன்று முறையும் காலிறுதிச் சுற்றுக்கு முன்பு அல்காரஸ் வெளியேறியதில்லை. இந்த நிலையில் இரண்டாவது சுற்றிலேயே தற்போது வெளியேறியிருக்கிறார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 1996-க்கு பிறகு முதல் மூன்று நிலைகளிலுள்ள வீரரை வீழ்த்திய முதல் நெதர்லாந்து வீரர் என்கிற பெருமையை போடிக் பெற்றுள்ளார். முன்னதாக, 1996-ல் விம்பிள்டன் காலிறுதிச் சுற்றில் ரிச்சர்ட் கிராஜிசெக் உலகின் முதல் நிலை வீரரான பீடே சாம்பிராஸை வீழ்த்தினார்.
அமெரிக்க ஓபனில் 1991-க்கு பிறகு இந்தச் சாதனையை நிகழ்த்தும் முதல் வீரர் போடிக். 1991-ல் போரிஸ் பெக்கரை மூன்றாவது சுற்றில் வெளியேற்றியது போடிக்கின் பயிற்சியாளர் பால் ஹார்ஹியிஸ்.