
ஐபிஎல் போட்டியில் எந்த அணியும் ஏறெடுத்துப் பார்க்காத ஒரு வீரர் இரு விரைவான சதங்களை எடுத்து கவனம் ஈர்த்துள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த 26 வயது உர்வில் படேல் அதிரடியான விக்கெட் கீப்பர் பேட்டர். 2018-ல் பரோடாவுக்காக டி20யில் அறிமுகமான உர்வில் படேல், பிறகு குஜ்ராத் அணிக்காக விளையாட ஆரம்பித்தார்.
2023 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு குஜராத் அணியில் தேர்வானாலும் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். பிறகு 50 ஓவர் விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் 41 பந்துகளில் அருணாசலப் பிரதேசத்துக்கு எதிராகச் சதமடித்தார். இந்திய அளவில் 2-வது விரைவான லிஸ்ட் ஏ சதம் இது.
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் உர்வில் படேலின் பெயரே ஏலத்தில் அழைக்கப்படவில்லை.
இதனால் உண்டான ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஆட்டத்தில் வெளிப்படுத்தினார் உர்வில் படேல். திரிபுராவுக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி ஆட்டத்தில் 12 சிக்ஸர்களுடன் 28 பந்துகளில் டி20 சதமடித்தார். இந்திய வீரர்கள் இது விரைவான டி20 சதம். உலகளவில் 2-வது இடம்.
அடுத்த ஒரு வாரத்தில் உத்தரகண்டுக்கு எதிராக 38 பந்துகளில் சதமடித்துள்ளார் உர்வில் படேல். இந்த வருட சையத் முஷ்டாக் அலி போட்டியில் அதிக சிக்ஸர் அடித்தவர்களில் பாண்டியாவையும் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.