
மகளிர் டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் மழை எச்சரிக்கை காரணமாக ஆட்டத்தை விரைவாக முடிக்க, ஐக்கிய அரபு அமீரக பேட்டர்கள் அனைவரும் ரிடையர்ட் அவுட் முறையில் வெளியேறியிருக்கிறார்கள்.
2026 மகளிர் டி20 உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெறவிருக்கிறது. இதற்கான தகுதிச் சுற்று பிராந்திய ரீதியில் நடைபெற்று வருகிறது. உலகளாவிய தகுதிச் சுற்றுக்குத் தகுதிபெற ஆசிய பிராந்தியத்திலிருந்து இரு அணிகள் தகுதி பெறும். இதற்கான தகுதிச் சுற்று தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
ஆசியப் பிராந்தியத்திலிருந்து மூன்று பிரிவுகளில் தலா மூன்று அணிகள் என்கிற வீதத்தில் மொத்தம் 9 அணிகள் போட்டியிடுகின்றன. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுடைய பிரிவில் உள்ள மற்ற இரு அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் மூன்று பிரிவுகளிலிருந்தும் தலா ஓர் அணி சூப்பர் 3 சுற்றுக்குத் தகுதி பெறும். இதில் ஒவ்வொரு அணியும் மற்ற இரு அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலகளாவிய தகுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
இந்தத் தகுதிச் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகம் அணி மலேசியா மற்றும் கத்தாருடன் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. மே 9 அன்று மலேசியாவை எதிர்கொண்ட ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி கண்டது. தொடர்ச்சியாக இன்று கத்தாரை எதிர்கொண்டது. சூப்பர் 3 சுற்றுக்குத் தகுதி பெற கத்தாருக்கு எதிரா வெற்றி கட்டாயம் என்ற நிலையில் ஐக்கிய அரரபு அமீரகம் இருந்தது. ஆனால், மழை குறுக்கீட்டால் ஆட்டம் பாதிக்கப்படலாம் என்ற குழப்பம் நிலவி வந்தது.
இதனால், இதுவரையில் இல்லாத வகையில் மிகப் புத்திசாலித்தனமான யுத்தியைக் கையாண்டு ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி கண்டுள்ளது.
டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் முதலில் பேட் செய்தது. கேப்டன் எஷா ஓஸா மற்றும் தீர்தா சதீஷ் அட்டகமாக விளையாடிய முதல் விக்கெட்டுக்கு 16 ஓவர்களில் 192 ரன்கள் சேர்த்தார்கள். ஓஸா 55 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். தீர்த்தா சதீஷ் 42 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார்.
மழை எச்சரிக்கை காரணமாக ஆட்டத்தை முன்கூட்டியே முடித்து முடிவைக் காண விரும்பியது ஐக்கிய அரபு அமீரகம். இதனால், எஷா ஓஸா, தீர்த்தா சதீஷ் ரிடையர்ட் அவுட் முறையில் வெளியேறினார்கள். அடுத்து வந்தவர்களும் பெயருக்கு உள்ளே வந்து, ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ளாமல் ரிடையர்ட் அவுட் முறையில் வெளியேறினார்கள். மழையைக் கருத்தில் கொண்டு நேரத்தைச் சேமிக்க ஐக்கிய அரபு அமீரகம் இவ்வாறு முடிவு செய்ததது.
16 ஓவர்கள் முடிவில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஐக்கிய அரபு அமீரகம். ஆட்டமிழந்த 10 பேரும் ரிடையர்ட் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்கள். தொடக்க பேட்டர்கள் தவிர்த்து மற்ற எவரும் ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ளவில்லை.
சர்வதேச டி20யில் அனைத்து பேட்டர்களும் ரிடையர்ட் அவுட் முறையில் ஆட்டமிழப்பது இதுவே முதன்முறை. 8 பேர் டக் அவுட் ஆனார்கள்.
193 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கத்தார் அணி 29 ரன்களுக்கு சுருண்டது. கத்தாரில் 7 பேர் டக் அவுட் ஆனார்கள். இதன்மூலம், 163 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஐக்கிய அரபு அமீரகம்.