எப்படி போட்டாலும் சிக்ஸர்: லக்னௌவை ஊதித் தள்ளிய சன்ரைசர்ஸ் வெற்றி!

சன்ரைசர்ஸ் வெற்றியின் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த மும்பை இந்தியன்ஸ்!
எப்படி போட்டாலும் சிக்ஸர்: லக்னௌவை ஊதித் தள்ளிய சன்ரைசர்ஸ் வெற்றி!
ANI

லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9.4 ஓவர்களில் 167 ரன்களை விரட்டி அதிரடியான வெற்றியைப் பெற்றுள்ளது.

ஐபிஎல் போட்டியின் இன்றைய முக்கியமான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஹைதராபாதில் விளையாடின. இரு அணிகளும் தலா 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முறையே 4 மற்றும் 6-வது இடத்தில் இருந்தன.

சன்ரைசர்ஸ் முதலில் பேட் செய்து 250 ரன்களுக்கு குவித்து வந்துள்ளதால், டாஸ் வென்ற கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட் கம்மின்ஸும் பேட் செய்யவே விரும்பினார்.

ஹைதராபாதின் இந்த ஆடுகளத்தில் சிக்ஸர் மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. புவனேஷ்வர் குமார் தனது இரண்டாவது ஓவரில் குயின்டன் டி காக்கை வீழ்த்தினார். தனது அடுத்த ஓவரில் மார்கஸ் ஸ்டாய்னிஸையும் வீழ்த்த, லக்னௌ தடுமாறியது.

பவர்பிளேயில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்த லக்னௌ 6 ஓவர்களில் வெறும் 27 ரன்களை மட்டுமே எடுத்தது. ராகுல் களத்திலிருந்தாலும், ஸ்டிரைக் ரேட் உயரவில்லை. 2-வது ஓவருக்கு பிறகு 8-வது ஓவரில்தான் கிருனாள் பாண்டியா அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் அடித்தார். இன்னிங்ஸின் முதல் பவுண்டரியை 10-வது ஓவரில் ராகுல் அடித்தார். கம்மின்ஸ் வீசிய இதே ஓவரின் கடைசிப் பந்தில் ராகுல் ஆட்டமிழக்கவும் செய்தார். அவர் 33 பந்துகளில் தலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 29 ரன்கள் எடுத்தார்.

10 ஓவர்கள் முடிவில் லக்னௌ 57 ரன்கள் மட்டுமே எடுத்தது. 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த கிருனா் பாண்டியாவும் ரன் அவுட் ஆனார்.

இதன்பிறகு, நிகோலஸ் பூரன் மற்றும் ஆயுஷ் பதோனி கூட்டணி அமைத்தார்கள். 13 ஓவர்கள் வரை லக்னௌ ரன் ரேட் ஓவருக்கு 6-க்கு குறைவாகவே இருந்தது.

நடராஜன் வீசிய 14-வது ஓவரில் பதோனி 3 பவுண்டரிகள் அடித்தார். இதிலிருந்து இருவரும் அதிரடியைத் தொடர்ந்தார்கள். 15-வது ஓவரில் 100 ரன்களை எட்டியது லக்னௌ.

கடைசி கட்ட ஓவர்களில் புவனேஷ்வர் குமார் மட்டும் ஒரு ஓவரை சிறப்பாக வீசினார். நடராஜனுக்கு இன்றைய இரவு சிறப்பானதாக அமையவில்லை. பதோனி 28 பந்துகளில் அரை சதம் அடித்தார். கம்மின்ஸ் வீசிய கடைசி ஓவரில் பதோனி ஒரு பவுண்டரியும், பூரன் மூன்று பவுண்டரிகளையும் அடித்து இன்னிங்ஸை அதிரடியாக நிறைவு செய்தார்கள்.

20 ஓவர்களில் லக்னௌ 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. கடைசி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் விளாசினார்கள். பூரன், பதோனி இணை 52 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார்கள்.

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா (இம்பாக்ட் வீரர்) களமிறங்கினார்கள். இரு இடக்கை பேட்டர்கள் இருந்ததால், கே கௌதமை பந்துவீச அழைத்தார் ராகுல். முதல் ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார் டிராவிஸ் ஹெட்.

யஷ் தாக்குர் வீசிய இரண்டாவது ஓவரில் அபிஷேக் சர்மா 4 பவுண்டரிகள் அடித்தார். இதிலிருந்து இருவரும் சரவெடியாக வெடிக்கத் தொடங்கினார்கள். அடித்தால் பவுண்டரி, சிக்ஸர் என விளையாடத் தொடங்கினார்கள்.

கௌதம் வீசிய 3-வது ஓவரில் ஹெட் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்தார். பிஷ்னாயை அழைத்தார் ராகுல். இந்த ஓவரை சிக்ஸருடன் தொடங்கினார் அபிஷேக் சர்மா. ஹெட் சிக்ஸருடன் நிறைவு செய்தார்.

எப்படி போட்டாலும் அடிக்கிறார்கள் என்கிற பாணியில் செய்வதறியாது திகைத்து நின்றுகொண்டிருந்தார் ராகுல். நவீன் உல் ஹக் பந்தை சிக்ஸருக்கு அனுப்பிய ஹெட் 16-வது பந்தில் அரை சதத்தை எட்டினார். பவர்பிளேயின் கடைசி ஓவரிலும் 20 ரன்கள்.

லக்னௌ அணி பவர்பிளேயில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்த இதே ஆடுகளத்தில், சன்ரைசர்ஸ் 8 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் விளாசி 6 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்தது.

ஸ்டாய்னிஸ், கிருனாள் பாண்டியா என யாரையும் பயன்படுத்தாமல், இம்பாக்ட் வீரர் விதிமுறையையும் பயன்படுத்தாமல், பவர்பிளே முடிந்தவுடன் பகுதி நேரப் பந்துவீச்சாளரான பதோனியிடம் பந்தைக் கொடுத்தார் ராகுல். ஹெட் ஒரு சிக்ஸர், அபிஷேக் ஒரு சிக்ஸர் அடித்தார்கள். இந்த சிக்ஸர் மூலம் 19-வது பந்தில் அரை சதத்தை எட்டினார் அபிஷேக் சர்மா.

இருவரும் மைதானத்தில் சிக்ஸர் அடிக்காத இடத்திலெல்லாம் சிக்ஸர்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 167 ரன்கள் எடுத்து 62 பந்துகள் மீதமிருக்க 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அதிரடியான வெற்றியைப் பெற்றது சன்ரைசர்ஸ். அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உள்பட 75 ரன்கள் விளாசினார். ஹெட் 30 பந்துகளில் 8 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் உள்பட 89 ரன்கள் விளாசினார்.

இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளை அடைந்த சன்ரைசர்ஸ் புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கேவை பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்துக்கு முன்னேறியது. இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் தனது பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.

இந்த ஆட்டத்துக்கு முன்பு -0.065 ஆக சன்ரைசர்ஸ் நெட் ரன் ரேட் தற்போது +0.406 ஆக உயர்ந்துள்ளது.

சன்ரைசர்ஸுக்கு இன்னும் இரு ஆட்டங்கள் மீதமுள்ளன. இரண்டுமே இதே ஹைதராபாதில் நடைபெறவிருக்கிறது.

சன்ரைசர்ஸ் படைத்த சாதனை:

இந்த வெற்றியின் மூலம் டி20 வரலாற்றில் 10 ஓவர்களுக்குள் அதிக ரன்களை (167) விரட்டி சன்ரைசர்ஸ் அணி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு, 2019-ல் பிரிஸ்பேன் ஹீட் அணி, மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிராக 10 ஓவர்களுக்குள் 157 ரன்களை அடித்ததே சாதனையாக இருந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in