
2024-ல் இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இந்திய ஜாம்பவான் அஸ்வின் வரை ஏராளமான வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளார்கள். ஆண்டு இறுதியை எட்டியுள்ள நிலையில், ஓய்வு பெற்றுள்ள வீரர்கள் குறித்த மீள் பார்வை.
டீன் எல்கர்
தென்னாப்பிரிக்க வீரர் டீன் எல்கர் (36) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்தியாவுடனான இரு டெஸ்டுகள் கொண்ட தொடருடன் எல்கர் ஓய்வு பெற்றார்.
ஹெயின்ரிக் கிளாஸென்
தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வெள்ளைப் பந்து வீரர் கிளாஸென், டெஸ்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக ஜனவரியில் அறிவித்தார். தென்னாப்பிரிக்காவுக்காக 4 டெஸ்டுகளில் மட்டுமே கிளாஸென் விளையாடியுள்ளார்.
டேவிட் வார்னர்
ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஜனவரியில் அறிவித்தார். கடைசியாக இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதி ஆட்டம்தான் வார்னரின் கடைசி ஒருநாள் ஆட்டம். ஜனவரியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் டெஸ்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். தொடர்ந்து, ஜூனில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச டி20யிலிருந்தும் வார்னர் ஓய்வு பெற்றார்.
சௌரப் திவாரி
சௌரப் திவாரி தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பிப்ரவரியில் அறிவித்தார். ரஞ்சி கோப்பைப் போட்டையில் பிப்ரவரி 16 அன்று ராஜஸ்தானுக்கு எதிராக ஜார்க்கண்டுக்காகக் கடைசியாக விளையாடினார்.
ஆரோன் ஃபிஞ்ச்
2023-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபிஞ்ச், 2024-ல் தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஷான் மார்ஷ்
40 வயது ஷான் மார்ஷ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
மனோஜ் திவாரி
பெங்கால் அணியின் கேப்டனான மனோஜ் திவாரி பிப்ரவரியில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
கடந்தாண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்த மனோஜ் திவாரி, ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்று ரஞ்சி கோப்பையில் விளையாடினார். நாக் அவுட் சுற்றுக்கு பெங்கால் தகுதி பெறவில்லை. இதையடுத்து, பிஹாருக்கு எதிரான ஆட்டத்துடன் மனோஜ் திவாரி ஓய்வு பெற்றார்.
நீல் வேக்னர்
நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் நீல் வேக்னர் கடந்த பிப்ரவரி மாதம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் நீல் வேக்னர் சேர்க்கப்படாததையடுத்து, மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில் ஓய்வு பெறுவதாக நீல் வேக்னர் அறிவித்தார்.
மரை எராஸ்மஸ்
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபல சர்வதேச கிரிக்கெட் நடுவர் மரை எராஸ்மஸ் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற்றார். எனினும் ஐபிஎல் போன்ற உள்ளூர் போட்டிகளில் நடுவராகத் தொடரவுள்ளார்.
வருண் ஆரோன்
இந்திய வேகப்பந்துவீச்சாளர் வருண் ஆரோன் கடந்த பிப்ரவரியில் முதல் தர போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஷாபாஸ் நதீம்
இந்திய இடக்கை சுழற்பந்துவீச்சாளர் ஷாபாஸ் நதீம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மார்ச்சில் அறிவித்தார்.
தவல் குல்கர்னி
மும்பையைச் சேர்ந்த தவல் குர்கர்னி முதல்தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரஞ்சி கோப்பையை மும்பை வென்ற நிலையில், வெற்றியுடன் பயணத்தை முடித்துக் கொண்டார் குல்கர்னி.
ஜேம்ஸ் ஆண்டர்சன்
இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 704 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டுன் ஆண்டர்சன் ஓய்வு பெற்றார்.
ஐபிஎல் 2025 ஏலத்தில் ஆண்டர்சன் பதிவு செய்திருந்தார். ஆனால், எந்தவோர் அணியால் அவர் தேர்வு செய்யப்படவில்லை.
தினேஷ் கார்த்திக்
ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் மே மாதம் அறிவித்தார். கடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்காக எலிமினேட்டரில் விளையாடியதே இவருடையக் கடைசி ஐபிஎல் ஆட்டம்.
இதைத் தொடர்ந்து, தனது பிறந்தநாளான ஜூன் 1 அன்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்தார்.
காலின் முன்ரோ
நியூசிலாந்து அதிரடி பேட்டர் காலின் முன்ரோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மே மாதம் அறிவித்தார். டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெறாததையடுத்து, ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.
கெதார் ஜாதவ்
அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக கெதார் ஜாதவ் கடந்த ஜூனில் அறிவித்தார். எம்எஸ் தோனியின் பாணியில் ஓய்வு முடிவை வெளியிட்டு கவனம் பெற்றார்.
டேவிட் வீஸே
சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியாவுக்காக விளையாடிய டேவிட் வீஸே டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற்றார்.
தென்னாப்பிரிக்காவுக்காக 20 டி20 மற்றும் 6 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். நமீபியாவுக்காக 34 டி20 மற்றும் 9 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
விராட் கோலி
டி20 உலகக் கோப்பையை வென்றவுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார்.
டி20 உலகக் கோப்பை முழுக்க மோசமான ஃபார்மில் இருந்த கோலி, இறுதி ஆட்டத்தில் 76 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை வென்றார். விருதை வென்றபோது, ஓய்வு முடிவை வெளியிட்டார்.
ரோஹித் சர்மா
டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
உலகக் கோப்பை வென்ற பிறகு செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ரோஹித் தனது ஓய்வு முடிவை வெளியிட்டார்.
ரவீந்திர ஜடேஜா
விராட் கோலி, ரோஹித் சர்மா வரிசையில் டி20 உலகக் கோப்பை வென்றவுடன் ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஷிகர் தவன்
இந்திய அணியின் முன்னணி தொடக்க பேட்டராக இருந்த ஷிகர் தவன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆகஸ்டில் அறிவித்தார்.
டேவிட் மலான்
இங்கிலாந்து பேட்டர் டேவிட் மலான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணியில் இடம் கிடைப்பது சவாலாக இருந்த நிலையில், 37 வயதில் ஓய்வு முடிவை வெளியிட்டார்.
ஷெனான் கேப்ரியல்
மேற்கிந்தியத் தீவுகள் வேகப்பந்துவீச்சாளர் ஷெனான் கேப்ரியல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார்.
பரிந்தர் ஸ்ரான்
இந்திய இடக்கை வேகப்பந்துவீச்சாளர் பரிந்தர் ஸ்ரான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆகஸ்டில் அறிவித்தார்.
மொயீன் அலி
இங்கிலாந்து ஆல்-ரௌண்டர் மொயீன் அலி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
டெஸ்டிலிருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்ற அவர், கடந்தாண்டு நடைபெற்ற ஆஷஸில் மட்டும் விளையாடினார்.
இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம் கிடைக்காததால், அடுத்த தலைமுறைக்கான நேரம் என்று கூறி செப்டம்பரில் ஓய்வு முடிவை வெளியிட்டார் மொயீன் அலி.
அலீம் தார்
பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடுவர் அலீம் தார் செப்டம்பரில் ஓய்வு பெற்றார்.
மஹ்மதுல்லா
வங்கதேச பிரபல வீரர் மஹ்மதுல்லா, அக்டோபரில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்துடன் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஏற்கெனவே, டெஸ்டிலிருந்து 2021-ல் ஓய்வு பெற்றுவிட்டார்.
மேத்யூ வேட்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் கடந்த அக்டோபரில் அறிவித்தார்.
உடனடியாக ஆஸ்திரேலிய டி20 அணியில் பயிற்சியாளர் பொறுப்பையும் அவர் பெற்றார்.
ரித்திமான் சஹா
நடப்பு ரஞ்சி கோப்பைப் பருவத்துடன் கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்வதாக இந்திய விக்கெட் கீப்பர் ரித்திமான் சஹா அறிவித்துள்ளார்.
ஜனவரியில் இரு லீக் ஆட்டங்களில் பெங்கால் அணி விளையாடுகிறது.
முஹமது நபி
ஆப்கானிஸ்தான் ஆல்-ரௌண்டர் முஹமது நபி, வரும் பிப்ரவரியில் தொடங்கவுள்ள சாம்பியன் கோப்பைப் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
டெஸ்டிலிருந்து 2019-ல் ஓய்வு பெற்றார் நபி.
சித்தார்த் கௌல்
இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சித்தார்த் கௌல் நவம்பரில் அறிவித்தார்.
மேஜர் லீக், கவுன்டி கிரிக்கெட் உள்ளிட்ட வெளிநாட்டு போட்டிகளில் விளையாட சித்தார்த் கௌல் தயாராகி வருகிறார்.
டிம் சௌதி
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடருடன் டெஸ்டிலிருந்து ஓய்வு பெற்றார் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதி.
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவது குறித்து அவர் இன்னும் முடிவு செய்யவில்லை.
இமாத் வாசிம்
டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவவைத் திரும்பப் பெற்ற பாகிஸ்தான் ஆல்-ரௌண்டர் இமாத் வாசிம், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக டிசம்பரில் அறிவித்தார்.
முஹமது ஆமிர்
2021-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற முஹமது ஆமிர், டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்றார்.
டி20 உலகக் கோப்பையில் விளையாடிய ஆமிர், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மீண்டும் ஓய்வு பெறுவதாக டிசம்பரில் அறிவித்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
பிஜிடி தொடரில் பிரிஸ்பேன் டெஸ்ட் முடிவடைந்தவுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.
பிஜிடி தொடரில் அடிலெய்ட் பகலிரவு டெஸ்டில் மட்டும் அஸ்வின் விளையாடினார்.
ஷகிப் அல் ஹசன்
வங்கதேச ஆல்-ரௌண்டர் ஷகிப் அல் ஹசன் டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20யிலிருந்து செப்டம்பரில் ஓய்வு பெற்றார்.
தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் விளையாடவிருந்த நிலையில், அதில் பங்கேற்க முடியாமல் போனது. இந்தியாவுக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் ஷகிப்பின் கடைசி டெஸ்டாக அமைந்துள்ளது.